சிங்கம்புணரி அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி


சிங்கம்புணரி அருகே மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 21 Jun 2019 10:18 PM GMT (Updated: 21 Jun 2019 10:18 PM GMT)

சிங்கம்புணரி அருகே மின்சாரம் தாக்கியதில் புதுமாப்பிள்ளை பலியானார். இதுதொடர்பாக மின்வாரியத்தை கண்டித்து அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர்.

சிங்கம்புணரி,

சிவகங்கை மாவட்டம் வடவன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கல்லம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசந்திரன் மகன் ராதாகிருஷ்ணன் (வயது 28). இவர் வெளிநாட்டில் வேலை செய்து விட்டு, கடந்த 2 மாதத்துக்கு முன்பு தனது திருமணத்திற்காக ஊருக்கு வந்திருந்தார்.

பின்பு திருமணம் முடித்து வெளிநாட்டில் வேலைக்கு செல்ல இருந்த நிலையில் தனது வீட்டு ஆடு, மாடுகளுக்கு தேவையான இலை தழைகளை பறிக்க வடவன் பட்டி-ஏரியூர் சாலையில் இருந்த மரத்தில் ஏறி அதிலிருந்த இலையை பறித்து கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியே தாழ்வாக சென்ற உயர்மின் அழுத்த கம்பி ராதாகிருஷ்ணன் மீது உரசியது. அதில் மின்சாரம் தாக்கி புதுமாப்பிள்ளை உயிரிழந்த நிைலயில் மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதையறிந்த அவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் பதறியடித்தபடி அங்கு வந்து புதுமாப்பிள்ளை ராதாகிருஷ்ணனின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

மேலும் இந்த சம்பவத்திற்கு மின்வாரியத்தின் அலட்சியமே காரணம் என்று குற்றம் சாட்டி அந்த சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த சிங்கம்புணரி தாசில்தார் பஞ்சவர்ணம் போராட்டக்காரர்களிடம் சமரச பேச்சுவார்த்ைத நடத்தி போராட்டத்தை கைவிட செய்தார். அதைத்தொடர்ந்து அங்கு வந்த திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினர் சுமார் 3 மணி நேரம் போராடி ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மரங்கள் நிறைந்த இந்த பகுதியில் மின்இணைப்பு அமைத்ததற்கும், அதில் உயர்மின் அழுத்த கம்பிகள் தாழ்வாக செல்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து எஸ்.எஸ்.கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 50 நாட்கள் ஆன நிலையில் புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story