முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லை மராட்டிய மேல்-சபையில் அரசு அறிவிப்பு


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லை மராட்டிய மேல்-சபையில் அரசு அறிவிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2019 4:00 AM IST (Updated: 22 Jun 2019 3:52 AM IST)
t-max-icont-min-icon

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லை என்று மராட்டிய மேல்-சபையில் மந்திரி வினோத் தாவ்டே அறிவித்தார்.

மும்பை, 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க சட்டத்தில் இடமில்லை என்று மராட்டிய மேல்-சபையில் மந்திரி வினோத் தாவ்டே அறிவித்தார்.

5 சதவீத இடஒதுக்கீடு

மராட்டியத்தில் நேற்று மேல்-சபை கூட்டத்தின் போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், “ மராட்டியத்தில் பெருமளவு முஸ்லிம்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாக உள்ளனர். ஆனால் மாநில அரசு அவர்களுக்கு கல்வியிலோ, வேலைவாய்ப்பிலோ இடஒதுக்கீடு வழங்குவதில் தோல்வியுற்றுவிட்டது” என கூறினர்.

இதற்கு பதிலளித்து மந்திரி வினோத் தாவ்டே கூறியதாவது:-

சட்டத்தில் இடம் இல்லை

ஆளும் பா.ஜனதா அரசு இடஒதுக்கீடு தொடர்பான அரசியலமைப்பு விதிகளுக்கு எதிராக செயல்படாது. அம்பேத்கர் இடஒதுக்கீட்டிற்காக வரையறையை வகுத்த நேரத்தில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என கூறியுள்ளார். எனவே சட்டத்தை பா.ஜனதா அரசு புறந்தள்ளி விட்டு, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்காது.

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பல ஆண்டுகள் இருந்தபோதிலும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை.

சட்டசபை தேர்தலை மனதில் வைத்து வஞ்சித் பகுஜன் அகாடி கட்சி தங்கள் ஓட்டுகளை பிரித்துவிடக்கூடாது என்பதற்காகவே எதிர்க்கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைக்கின்றன. மற்றபடி அந்த சமுதாய மக்களை முன்னேற்றவேண்டும் என்ற எண்ணம் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story