அருப்புக்கோட்டையில் லாரி மூலம் குடிநீர் வினியோகம்; சாத்தூர் ராமச்சந்திரன் ஏற்பாடு


அருப்புக்கோட்டையில் லாரி மூலம் குடிநீர் வினியோகம்; சாத்தூர் ராமச்சந்திரன் ஏற்பாடு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-22T03:59:07+05:30)

அருப்புக்கோட்டையில் சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தனது சொந்த செலவில் லாரி மூலம் குடிநீர் வழங்குகிறார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டையில் கடந்த சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாட்டால் நகராட்சி நிர்வாகம் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் தினமும் கிடைக்கப்பெறும் 20 லட்சம் லிட்டர் குடிநீரை சுழற்சி முறையில் வார்டு வாரியாக வினியோகம் செய்து வந்தது. இதனால் 30 நாட்களை தாண்டியும் பல பகுதிகளுக்கு தண்ணீர் வரவில்லை என்று போராட்டத்தில் ஆங்காங்கே ஈடுபட்டு வந்தனர்.

இதனைதொடர்ந்து கலெக்டர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை சாத்தூர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. சந்தித்து போர்க்கால அடிப்படையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை வைத்தார். மேலும் நகராட்சி அதிகாரிகளுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தி தற்போதைக்கு குடிநீர் பிரச்சினையை போக்க எத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று ஆலோசனை மேற்கொண்டார்.

கூட்டத்தில் அவருடைய சொந்த நிதியில் இருந்து லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்வது என தீர்மானித்தார். அதன் அடிப்படையில் முதற்கட்டமாக நேற்று வெள்ளைகோட்டை பகுதிகளான மேட்டங்கரை, கல்பாலம் ஆகிய இடங்களில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3 குடங்கள் என தீர்மானித்து குடிதண்ணீரை வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:- தற்போது நகராட்சி மூலம் வழங்கப்படும் குடிநீர் தொடர்ந்து வழங்கப்படும். நகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவே எனது சொந்த நிதியில் இருந்து லாரி மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். தினந்தோறும் 60 ஆயிரம் லிட்டர் குடிநீரை லாரியில் கொண்டு வந்து அனைத்து வார்டு பகுதிகளில் வழங்குவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளேன். மேலும் அன்றாட தேவைக்கு பயன்படுத்தும் தண்ணீரையும் நகராட்சி மூலம் தினந்தோறும் 15 டிராக்டர்களில் வினியோகம் செய்யவும் வலியுறுத்தியுள்ளேன்.

மேலும் திருப்புவனம் ஆற்றிலிருந்து வைகை அணை தண்ணீர் வரும் குழாயின் அருகே புதிய ஆழ்துளை கிணறு அமைத்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் தண்ணீரை வைகை தண்ணீர் குழாய் வழியாக கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

அது பயன்பாட்டிற்கு வரும்போது 7 லட்சம் லிட்டர் தண்ணீர் கூடுதலாக கிடைக்கும். போலீஸ் நிலையம் பின்புறத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து திருநகரம் பகுதிக்கு குடிநீர் கொண்டு செல்ல பகிர்மான குழாய்கள் பதித்து அப்பகுதிக்கு சீரான குடிநீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story