1.10 லட்சம் பேர் கலந்து கொண்ட யோகா பயிற்சி உலக சாதனை படைத்தது பல்வேறு ஆசனங்களை செய்து முதல்-மந்திரி பட்னாவிஸ் அசத்தினார்
உலக யோகா தினத்தையொட்டி பாபா ராம்தேவ் தலைமையில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட யோகா பயிற்சி உலக சாதனை படைத்தது.
நாந்தெட்,
உலக யோகா தினத்தையொட்டி பாபா ராம்தேவ் தலைமையில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட பிரமாண்ட யோகா பயிற்சி உலக சாதனை படைத்தது. இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பல்வேறு ஆசனங்களை செய்து அசத்தினார்.
பிரமாண்ட யோகா முகாம்
5-வது சர்வதேச யோகா தினம் நேற்று மராட்டிய மாநிலம் முழுவதும் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் நாந்தெட்டில் யோகா குரு பாபா ராம்தேவ் தலைமையில் பிரமாண்ட யோகா முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
பல்வேறு சமூக அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடந்த இந்த முகாமில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் உள்பட பல்வேறு தரப்பினர் என 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கலந்துகொண்டு யோகாசனம் செய்தனர்.
இதில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் கலந்து கொண்டார். மேலும் பா.ஜனதா எம்.பி. கோவிந்த்ராவ் சிக்கல்கர், மாவட்ட கலெக்டர் அருண் டாங்கரேயும் கலந்து கொண்டனர்.
இதில், பாபா ராம்தேவ் யோகாசன பயிற்சியை செய்ய, அவரை பின் தொடர்ந்து அனைவரும் செய்தனர். முதல்-மந்திரி பட்னாவிஸ் பாபா ராம்தேவுக்கு இணையாக அனைத்து யோகாசனங்களையும் செய்து அசத்தினார்.
பின்னர் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-
உலக சாதனை
நமது பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் இன்று உலகம் முழுவதும் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. யோகா பயிற்சியினால் நமது உடல் வலிமையாவது மட்டுமின்றி மனதிற்கும் புது வலிமை கிடைக்கிறது. இந்தியாவின் கலாசாரம் மற்றும் பாரம்பரியமிக்க யோகா இன்று 150 நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
1 லட்சத்து 10 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இந்த யோகா நிகழ்ச்சி உலக சாதனையாக கோல்டன் புத்தகத்தில் இடம் பிடித்தது. இது குறித்து கோல்டன் புத்தக பிரதிநிதி மனிஷ் பிசோனி கூறுகையில், கடந்த ஆண்டு 91 ஆயிரம் பேர் கலந்து கொண்ட யோகா நிகழ்ச்சி கோல்டன் புத்தகத்தில் இடம்பிடித்தது உலக சாதனையாக கருதப்பட்டது. அந்த சாதனை தற்போது முறி யடிக்கப்பட்டு உள்ளது” என்றார்.
நிதின் கட்காரி
இதேபோல நாக்பூரில் உள்ள யஷ்வந்த் மைதானத்தில் மத்திய மந்திரி நிதின் கட்காரி தலைமையில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அவர் பல யோகாசனங்கள் செய்தார்.
பின்னர் அவர் கூறுகையில், ‘‘யோகாசனம் இந்திய நாட்டின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வரலாற்றின் அடையாளம். இது உலகம் முழுவதும் ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்வுக்காக சமூகத்தின் கடைசி மனிதனையும் யோகா சென்றடைய வேண்டும்’’ என்றார்.
Related Tags :
Next Story