பெரிய கப்பல்கள் செல்ல வசதியாக பாம்பனில் ரூ.1,500 கோடியில் புதிய ரோடு பாலம்; தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் ஆய்வு


பெரிய கப்பல்கள் செல்ல வசதியாக பாம்பனில் ரூ.1,500 கோடியில் புதிய ரோடு பாலம்; தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 22 Jun 2019 4:30 AM IST (Updated: 22 Jun 2019 4:03 AM IST)
t-max-icont-min-icon

பாம்பனில் ரூ.1,500 கோடியில் புதிய ரோடு பாலம் பெரிய கப்பல்களும் செல்ல வசதியாக கட்டுவது குறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனர் ஆய்வு மேற்கொண்டனர்.

ராமேசுவரம்,

அகில இந்திய அளவில் பிரசித்தி பெற்ற புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்து கார், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும், ரெயில்களிலும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக மதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக அதிக வாகனங்கள் வருவதால் அவ்வப்போது இந்த சாலைகளில் பல இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு போக்குவரத்து நெருக்கடி உருவாகிறது.

இதையடுத்து மத்திய அரசு முதல் கட்டமாக மதுரை-பரமக்குடி இடையே உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற முடிவு செய்து அதற்கான நிதியை ஒதுக்கியது. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக மதுரை-பரமக்குடி இடையே நடைபெற்று வந்த நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்து இந்த பாதையில் போக்குவரத்து நடந்து வருகிறது.

2-வது கட்டமாக பரமக்குடி-ராமேசுவரம் இடையே உள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த நான்கு வழிச்சாலை பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இந்நிலையில் பரமக்குடி-ராமேசுவரம் இடையே சுமார் ரூ.3,000 கோடியில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெறவுள்ளதாகவும் இதில் பாம்பன் கடலில் சுமார் ரூ.1,500 கோடியில் 2½ கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிதாக பாலம் கட்ட தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி பரமக்குடி-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலை அமைந்தால் பாம்பன் கடலில் மேலும் ஒரு புதிய பாலமும் கட்டப்பட வேண்டும். இந்த புதிய ரோடு பாலத்தை பெரிய கப்பல்களும் கடந்து செல்ல வசதியாக கட்ட தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட ஆணையம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாம்பன் கடலில் புதிய ரோடு பாலம் கட்டுவது குறித்து ஆய்வு செய்ய நேற்று தேசியநெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் திட்ட இயக்குனர் பாஸ்கரன் மற்றும் மாநில துறைமுக அதிகாரி அன்பரசன் ஆகியோர் பாம்பன் வருகை தந்தனர்.

தெற்குவாடி கடற்கரையில் இருந்து 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் மீன்பிடி படகு மூலமாக தற்போதைய ரோடு பாலத்தின் மைய பகுதி வழியாக கப்பல்கள் செல்லும் பாதைகளின் அகலம்,உயரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கரைக்கு வந்த அதே குழுவினர் ரோடு பாலத்தின் மைய பகுதியில் இருந்து கப்பல் வரும் கடல் வழிப்பாதை மற்றும் ரோடு பாலத்தை ஆய்வு செய்தனர்.

ஆய்விற்கு பின்பு தேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையத்தின் திட்ட இயக்குனர் பாஸ்கரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பரமக்குடி-ராமேசுவரம் இடையே நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. விரைவில் இந்த பணிகள் தொடங்கப்பட உள்ளன. நான்கு வழிச்சாலையாக மாறும் பட்சத்தில் பாம்பன் கடலில் மேலும் ஒரு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது.

புதிய ரோடு பாலம் கட்டும்போது மைய பகுதியில் பெரிய கப்பல்களும் செல்ல வசதியாக தற்போது உள்ள அகலத்தை விட கூடுதல் அகலத்துடன் புதிய ரோடு பாலம் கட்டினால்தான் பெரிய கப்பல்கள் செல்ல முடியும் என துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதற்காக பாம்பன் கடலில் உள்ள மைய பகுதி மற்றும் ரோடு பாலத்தை ஆய்வு செய்துள்ளோம். இதுகுறித்து துறைமுக அதிகரிகளோடு கலந்து ஆலோசித்து மைய பகுதியில் கூடுதல் அகலத்துடன் புதிய பாலம் கட்டப்படும். புதிய ரோடு பாலம் எந்த மாதிரியான வடிவம், தூண்களின் உயரம் உள்ளிட்டவை குறித்து வரைபடம் வரைந்து அதற்கான திட்ட மிதிப்பீடுக்காக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, நிதி ஒதுக்கிய பின்பு பாலத்தின் பணிகள் தொடங்கப்படும்.

உச்சிப்புளியில் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படவுள்ளது. பாம்பன் ரோடு பாலத்தில் இருந்து பாம்பன் நகர் மற்றும் தங்கச்சிமடம் நகருக்குள் நான்கு வழிச்சாலை வராது. கடற்கரையை ஒட்டியே புறவழிச் சாலையானது ராமேசுவரம் வரை போடப்படவுள்ளது. புதிய ரோடு பாலம் தற்போதுள்ள ரோடு பாலத்தில் இருந்து 160 மீட்டர் தூரத்தில் தென் கடல் பகுதியில் கட்டப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது உடனிருந்த மாநில துறைமுக அதிகாரி அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது உள்ள ரோடு பாலத்தின் மைய பகுதியில் கப்பல்கள் செல்ல 115 மீட்டர் அகலம் உள்ளது.தற்போதுள்ள ரோடு பாலத்தை விட உயரமாகவும், 160 மீட்டர் அகலத்துடன் பெரிய கப்பல்கள் செல்ல வசதியாக புதிய ரோடு பாலம் கட்ட வேண்டும் என தேசியநெடுஞ் சாலைத்துறை ஆணைய திட்ட இயக்குனரிடம் வலியுறுத்தியுள்ளோம்.

முறையாக தூக்குப் பாலத்தை திறக்க ரெயில்வே நிர்வாகத்திற்கு கடிதம் கொடுத்தும் பழமையான பாலம் என காரணம் காட்டி தூக்குப் பாலத்தை திறக்க ரெயில்வே துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். வாரம் ஒரு முறை திறக்கப்பட்டுவந்த தூக்குப்பாலம் தற்போது மாதம்ஒருமுறை மட்டும் தான் திறக்கப்பட்டு வருகிறது.

இதனால் கப்பல்கள்,படகுகள் பல நாட்கள் வரையிலும் காத்திருந்து கடந்து செல்ல வேண்டியுள்ளது. கப்பல்கள்,படகுகள் கடக்க வரும்போது வாரம் ஒருமுறை தூக்குப் பாலம் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரெயில்வே நிர்வாகத்திற்கு மீண்டும் கடிதம் மூலம் வலியுறுத்தி உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story