சின்னாளபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், குடிநீர் இணைப்பு துண்டிப்பு - பேரூராட்சி அலுவலகத்துக்குள் குடத்துடன் புகுந்த மாணவர்களால் பரபரப்பு


சின்னாளபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், குடிநீர் இணைப்பு துண்டிப்பு - பேரூராட்சி அலுவலகத்துக்குள் குடத்துடன் புகுந்த மாணவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:41 PM GMT (Updated: 21 Jun 2019 10:41 PM GMT)

சின்னாளபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பேரூராட்சி அலுவலகத்துக்குள் குடத்துடன் புகுந்த மாணவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னாளபட்டி,

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி பேரூராட்சிக்கு பேரணையில் இருந்தும், ஆழ்துளை கிணறுகள் மூலமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் 7 நாளைக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் சின்னாளபட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் இருந்த குடிநீர் இணைப்பை கோடை விடுமுறையின் போது பேரூராட்சி அலுவலர்கள் துண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் பள்ளி திறந்து 15 தினங்களுக்கு மேல் ஆகியும் குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியை குயின்மேரி பேரூராட்சி நிர்வாகத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு பள்ளிக்கு குடிநீர் இணைப்பு வழங்குமாறு மனு கொடுத்தார். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் குடிநீர் இணைப்பு வழங்கவில்லை.

இதனால் பள்ளி மாணவர்கள் வகுப்பு நேரத்தில் குடத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்கு வெளியே உள்ள டீ கடைகளில் வந்து தண்ணீர் பிடித்து செல்வது தொடர்கதையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று இந்த மாணவர்களுக்கு டீ கடைகளில் தண்ணீர் தர மறுத்ததால் வகுப்பு நேரத்தில் பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள குழாயில் தண்ணீர் பிடிக்க குடத்துடன் வந்தனர். இதைபார்த்த பேரூராட்சி அலுவலர்கள் மாணவர்களை தண்ணீர் பிடிக்க வரக்கூடாது என விரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் குடத்துடன் பேரூராட்சி அலுவலகத்திற்கு உள்ளே புகுந்தனர். அங்கு அவர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசியிடம், பள்ளியில் இருந்த குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. உங்கள் அலுவலகத்திற்கு வந்து தண்ணீர் பிடிக்க வந்தாலும் விரட்டுகிறார்கள். நாங்கள் தண்ணீருக்கு எங்கே செல்வது? என கேட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேரூராட்சி செயல் அலுவலர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து மாணவர்கள் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:- பள்ளியில் இருந்த குடிநீர் இணைப்பை துண்டித்து விட்டனர். இதனால் பள்ளியில் படிக்கும் 100 மாணவர் களுக்கும் மதிய உணவு சமைக்க முடியாமல் வெளியில் சென்று தண்ணீர் கொண்டு வந்து சமைக்கின்றனர். மதிய உணவு சாப்பிடும் மாணவர்களுக்கு கை கழுவ கூட தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாததால் மாணவிகள் மற்றும் 7 பெண் ஆசிரியர்கள் இங்குள்ள கழிப்பறையை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர்.

இவ்வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 13 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கு உணவு தயாரிப்பதற்கும் வெளியில் இருந்து தண்ணீரை வாங்கி வந்து சமைக்கின்றனர். எனவே பள்ளி திறந்த நாள் முதல் மாணவர்கள் குடத்தை எடுத்துக் கொண்டு தண்ணீருக்காக வெளியில் செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story