இரு கிராம மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தைக்கோரி, சருத்துப்பட்டியில் பெண்கள் உண்ணாவிரதம் - ஆதார் கார்டை ஒப்படைக்க போவதாக அறிவிப்பு
இரு கிராம மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்தக்கோரி சருத்துப்பட்டியில் பெண்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.
பெரியகுளம்,
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியை சேர்ந்த ஒரு பிரிவை சேர்ந்த வாலிபர்கள் இருசக்கர வாகனத்தில் லட்சுமிபுரம் சென்றபோது, மற்றொரு பிரிவினர் மீது மோதுவது போல் சென்றதால் பிரச்சினை ஏற்பட்டது. இந்த பிரச்சினையை மையப்படுத்தி 12-ந்தேதி லட்சுமிபுரத்தில் ஒருதரப்பினர் மறியல் செய்தனர்.
இதற்கிடையே தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் சருத்துப்பட்டியை சேர்ந்த சிரஞ்சீவி என்ற போலீஸ்காரரை, லட்சுமிபுரத்தை சேர்ந்த மர்மநபர்கள் தாக்கியதாக தகவல் பரவியதை அடுத்து சருத்துப்பட்டியை சேர்ந்த வாலிபர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கிருந்த பொதுமக்களில் சிலர் திடீரென போலீசார் மீது கற்களை வீசியும், ஆயுதங்களாலும் தாக்கினர். இதில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மற்றும் 14 போலீசார் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சருத்துப்பட்டியை சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து சருத்துப்பட்டி மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரு கிராமங்கள் இடையே மோதல் போக்கு உருவாகி வருவதால் இரு கிராம மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், கைது நடவடிக்கையை போலீசார் கைவிட வேண்டும் என்று கோரி சருத்துப்பட்டி அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த பெண்கள் அப்பகுதியில் அமர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். அப்போது உடனடியாக இரு கிராம மக்கள் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இல்லையெனில் பொதுமக்கள் தங்களது ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து விடுவோம் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story