மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம்


மாவட்டம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் சர்வதேச யோகா தினம்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-22T04:11:44+05:30)

தேனி மாவட்டம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்வேறு இடங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

தேனி, 

சர்வதேச யோகா தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. அதன்படி தேனி மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. மேலும் யோகா குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, வினாடி வினா போட்டி, யோகாசன போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. உடற்கல்வி இயக் குனர்கள் மூலமாக மாணவ, மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.

தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை கல்வி நிறுவனங்களில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. உறவின்முறைக்கு உட்பட்ட பள்ளி, கல்லூரிகளில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. தேனி நாடார் சரசுவதி பப்ளிக் பள்ளியில் 539 மாணவ, மாணவிகள் இணைந்து சர்வதேச யோகா முத்திரை வடிவத்தில் அமர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிகழ்ச்சியில் பள்ளி செயலாளர் கண்ணன், இணைச் செயலாளர்கள் குணசேகரன், கண்ணன், பள்ளி முதல்வர் சாம்பவி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேனி நாடார் சரசுவதி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தினம், ‘முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு புத்தாக்க பயிற்சி’ என்ற தலைப்பில் கொண்டாடப்பட்டது. உறவின்முறை தலைவர் முருகன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜ்மோகன், பொருளாளர் பழனியப்பன், கல்லூரி செயலாளர் காளிராஜ், கல்லூரி முதல்வர் சித்ரா மற்றும் பலர் கலந்துகொண்டனர். மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டதுடன், யோகாசனம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

முத்துத்தேவன்பட்டியில் உள்ள தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் யோகா பயிற்சியாளர் ஜீவரேகா கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு யோகா பயிற்சி அளித்தார். பள்ளி செயலாளர் மகேஸ்வரன், பள்ளி முதல்வர் சுபாஈஸ்வரி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

தேனி பங்களாமேடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர் விடுதியில் யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக்கூறும் நிகழ்ச்சி நடந்தது. விடுதி காப்பாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். யோகா பயிற்சியாளர் மதன்சிங் கலந்துகொண்டு பயிற்சி அளித்தார்.

பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஐஸ்வர்ய விஸ்வா வித்யாலயா அமைப்பு சார்பில், கோடாங்கிபட்டியில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜ் மற்றும் போலீசார், மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை தேனி நிலைய பொறுப்பாளர் விமலா மற்றும் அமைப்பை சேர்ந்த ராகசுதா, வசந்தா ஆகியோர் செய்திருந்தனர்.

தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அறிவுரையின்பேரில், மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் உட்கோட்டங்களிலும் துணை சூப்பிரண்டுகள் தலைமையில் யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தேனி ஆயுதப்படை வளாகத்தில் போலீசாருக்கு யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தேனி மாவட்ட இந்தியன் செஞ்சிலுவை சங்கம் மற்றும் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் சர்வதேச யோகா தின விழா தேனி என்.ஆர்.டி. நகரில் நடந்தது. இந்தியன் செஞ்சிலுவை சங்க கவுரவ செயலாளர் சுருளிவேல் வரவேற்றார். கல்வியாளர்கள், தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். யோகா பயிற்சி மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கு நடத்தப்பட்டது.

Next Story