ரூ.26 கோடியில் கட்டப்பட்ட அனுமந்தநகர் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தது - காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
ரூ.26 கோடியில் கட்டப்பட்ட அனுமந்தநகர் மேம்பாலம் நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் பாலத்தை திறந்து வைத்தார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் அனுமந்தநகர், ரெயில் நிலையம் அருகே அமைந்துள்ளது. நாள்தோறும் 80-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்து செல்கின்றன.
இதனால் அனுமந்தநகர் ரெயில்வே கேட் பகுதியில் வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலை இருந் தது. இதையடுத்து அனுமந்தநகர் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
அதன்படி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அனுமந்தநகரில் நெடுஞ்சாலைத்துறை, ரெயில்வே நிர்வாகம் சார்பில் ரூ.26 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
பின்னர் அனைத்து பணிகளும் நிறைவு செய்யப்பட்டு பாலத்தின் சுவர்களுக்கு வர்ணம் தீட்டப்பட்டது. இதையடுத்து மேம்பாலத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் முன்னாள் மேயர் மருதராஜ், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மற்றும் அ.தி.மு.க.வினர் பலர் கலந்துகொண்டனர்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் மேம்பாலத்தை திறந்து வைத்தார். அதையடுத்து மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் இனிப்புகளை வழங்கினர். மேம்பாலம் திறக்கப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
Related Tags :
Next Story