அன்னூர் அருகே புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு


அன்னூர் அருகே புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 21 Jun 2019 10:41 PM GMT)

அன்னூர் அருகே புதரில் இருந்து மீட்கப்பட்ட பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

கோவை,

கோவை மாவட்டம் அன்னூர்-கோவை ரோட்டில் ஒரு தியேட்டர் அருகே புதருக்குள் கடந்த 15-ந் தேதி பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கிடந்தது. இதை அறிந்த அன்னூர் போலீசார் விரைந்து சென்று புதரில் இருந்த குழந்தையை மீட்டு அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அந்த குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

அத்துடன் அந்த குழந்தை 1 கிலோ 300 கிராம் எடை இருந்தது. எனவே அந்த குழந்தை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.. அங்கு புதிதாக தொடங்கப்பட்ட குழந்தைகள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது.

இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி டீன் அசோகன் கூறியதாவது:-

அன்னூரில் புதருக்குள் இருந்து மீட்கப்பட்ட குழந்தையை இன்குபேட்டரில் வைத்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். புதரில் கிடந்த போது குழந்தையை பூச்சிகள் கடித்ததால் அதன் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துவிட்டது. இதன் காரணமாக டாக்டர்கள் போதுமான சிகிச்சை அளித்தும் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை.

பச்சிளம் குழந்தையை புதருக்குள் வீசுவதற்கு பதிலாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தொட்டில் குழந்தை திட்டத்தில் போட்டு இருந்தால் பாதுகாப்பாக இருந்து இருக்கும். இதன் மூலம் குழந்தை இறப்பை தடுத்து இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story