புதுச்சேரியில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தடை


புதுச்சேரியில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆகஸ்டு 1-ந் தேதி முதல் தடை
x
தினத்தந்தி 21 Jun 2019 11:45 PM GMT (Updated: 21 Jun 2019 11:17 PM GMT)

புதுச்சேரி மாநிலத்தில் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்படுவதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

தமிழ்நாட்டில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட் களுக்கு தடை விதித்து அரசு உத்தரவிடப்பட்டு நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தை பின்பற்றி புதுவை மாநிலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என்று சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந்தேதி முதல் ஒருமுறை பயன்படுத்திவிட்டு மறுசுழற்சி செய்ய முடியாத 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய அரசு முடிவு செய்தது. ஆனால் அதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை.

இந்தநிலையில் கடந்த (2019) மார்ச் 1-ந்தேதி முதல் புதுவை மாநிலத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் இது நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.

இந்த முடிவினை மறுபரி சீலனை செய்யவேண்டும் என்று பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் சங்கத்தினர் அரசை வலியுறுத்தி வந்தனர். பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருளை உற்பத்தி செய்து பயன்படுத்த கால அவகாசம் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று கடந்த பல மாதங்களாக பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்படாமல் இருந்தது.

ஆனால் அண்டை மாநிலமான தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை கடுமையாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதையும் மீறி பயன்படுத்துபவர்கள், விற்பனை செய்பவர்களுக்கு அதிகபட்சமாக அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த அதிரடி நடவடிக்கையால் தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அடியோடு குறைந்து விட்டது.

இந்தநிலையில் தமிழகத்தைப்போல் புதுச்சேரியிலும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவதில் தீவிரம் காட்ட வேண்டும் என்ற கோரிக்கைகள் மீண்டும் எழுந்தன. இதுதொடர்பாக அரசின் மீது விமர்சனங்களும் எழுந்தன.

இதையொட்டி பிளாஸ்டிக் தடையை அமலுக்கு கொண்டுவருவது குறித்து பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தியாளர்களுடன் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கந்தசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். தலைமை செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனை கூட்டத்தில் தொழிலாளர் துறை ஆணையர் வல்லவன், சுற்றுச்சூழல் துறை இயக்குனர் ஸ்மிதா, முதுநிலை பொறியாளர் ரமேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

அப்போது பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த காலஅவகாசம் அளிக்கவேண்டும் என்று உற்பத்தியாளர்கள் கேட்டுக்கொண்டனர். மேலும் தற்போது தடை பட்டியலில் உள்ள சில பொருட்களை மறுசுழற்சி செய்ய வாய்ப்புகள் இருப்பதால் அதற்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும், அத்தகைய விலக்கு அளிக்க தமிழகத்திலும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தனர். அதேநேரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என்ற முடிவினை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கந்தசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்வது தொடர்பாக உற்பத்தியாளர்களுடன் கலந்து பேசினோம். அவர்கள் சில கருத்துகளை கூறி உள்ளனர். தமிழகத்தைப்போல் முன்பே பிளாஸ்டிக்கை தடை செய்வதுதான் எங்கள் எண்ணம். வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் இதை அமல்படுத்தாமல் அவகாசம் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் இனியும் அவகாசம் அளிக்க முடியாது.

தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அதேபோல் வருகிற ஆகஸ்டு 1-ந்தேதி முதல் புதுச்சேரி மாநிலத்திலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான தடை அமல்படுத்தப்படும். தமிழகத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்களுக்கு இங்கும் விலக்கு அளிக்கப்படும்.

பிளாஸ்டிக் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்ய பயிற்சி கொடுக்க உள்ளோம். தடையை மீறி செயல்படும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக கண்காணிக்க சுற்றுச்சூழல், உள்ளாட்சி, காவல் ஆகிய துறை அதிகாரிகளை கொண்ட பறக்கும் படை அமைக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி கூறினார்.

Next Story