கடவூர், தோகைமலையில் தட்டுப்பாட்டை போக்க லாரிகள் மூலம் தொட்டிகளில் தண்ணீர் சேமித்து வினியோகம் - கலெக்டர் அன்பழகன் தகவல்
கடவூர், தோகைமலை உள்ளிட்ட இடங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க லாரிகளில் குடிநீரை எடுத்து சென்று மேல்நிலைநீர்த்தேக்க தொட்டிகளில் சேமித்து வினியோகிக்கப்படுகிறது என கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.
கரூர்,
கரூர் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து குடிநீர்வடிகால் வாரிய அதிகாரிகள் முன்னிலையில், கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் 15 குடிநீர் திட்டம் மூலம் காவிரியாற்றில் அமைக்கப்பட்டுள்ள நீர்சேகரிப்பு கிணறுகளிலிருந்து தண்ணீர் பெறப்பட்டு பல்வேறு கிராமங்களுக்கு வினியோகிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் முன்னிலையில் 85 பொறியாளர்களை கொண்ட 14 குழுக்களுடன் ஆய்வு மேற்கொண்டு குடிநீர் கிடைக்காத இடங்களுக்கு மாற்றுவழி மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. கரூர் மாவட்டத்தில் 1,152 குடிநீர் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, அதில் 1,124 பணிகள் முடிக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள பணிகள் வருகிற 30-ந்தேதிக்குள் முடிக்கப்படும்.
கடவூர், தோகைமலை, அரவக்குறிச்சி உள்ளிட்ட குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிற பகுதிகளில் குடிநீர் வினியோகிக்க சிறப்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி குடிநீர் வடிகால் வாரியம் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை டேங்கர் லாரிகளில் கொண்டு சென்று கிராமங்களில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் சேகரித்து குழாய் மூலம் வினியோகிக்கப்படுகிறது. கடவூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 93 குக்கிராமங்களுக்கு தொடக்க நிலையில் 50 லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. அதேபோல, ஊரகவளர்ச்சித்துறையின் மூலமாக கடந்த ஒருமாத காலத்திற்கும் மேலாக 347 கிராமங்களுக்கு 53 லாரிகள் மூலம் சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றது.
தடுப்பணைகள்
முதல் நிலையில் இருப்பவர்கள் மோட்டார் வைத்து உறிஞ்சுவதால் கடைநிலையில் உள்ளவர்களுக்கு தண்ணீர் சென்று சேர முடியாமல் போகிறது. இதனை தடுக்கும் பொருட்டு, குடிநீர்வெளியேற்றும் வால்வு புதிதாக பொருத்தும் பணிகள் நடக்கிறது. இதனால் மோட்டார் வைத்து வேகமாக தண்ணீர் உறிஞ்ச முடியாது. ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டத்தை சீராக வைக்கும் பொருட்டு கடவூர், தோகைமலை பகுதிகளில் ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டப்படுகிறது. இதன் மூலம் மழைக்காலங்களில், ஆழ்துளைகிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்பாக உள்ளது. மேலும் வெளியிடங்களுக்கு விற்பனை செய்வதற்காக சட்டவிரோதமான முறையில் ஆறு, வாய்க்கால் உள்ளிட்டவற்றில் ஆழ்துளைகிணறு அமைத்து நீர் எடுப்பவர்கள் கண்டறியப்பட்டால் சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுப்பணித்துறை மூலம் அனுமதிபெற்றால் மட்டுமே விவசாய பயன்பாட்டுக்கு ஆறுகளிலிருந்து நீர் எடுக்கலாம்.
ஏரி-குளங்களை தூர்வாரும் பொருட்டு வண்டல் மண் அள்ள அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் வருவாய் துறையில் அனுமதி பெற்று மணல் அள்ளும் போது நீர்நிலைகள் தூர்வாரப்படுவதோடு, விவசாய பயன்பாட்டுக்கு அந்த வண்டல் மண் பயன்பெறும். கரூர் மாவட்டத்தில் 70 ஏரிகளில் இருந்து மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில ஏரிகளில் சரளை கற்கள் இருப்பதால் விவசாயிகள் மண்அள்ள முன்வருவதில்லை. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அதனை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மழைநீரை சேமிக்க பொதுமக்களும் முன்வர வேண்டும். வீடு கட்டும் போதே அனைத்து இடங்களிலும் சிமெண்டு பூசி விட்டால் மழைநீர் எப்படி பூமிக்குள் செல்லும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
கரூர் நகராட்சியில் 67,436 குடியிருப்புகளுக்கு 279 லட்சம்் லிட்டர் குடிநீர் சுழற்சி முறையில் வினியோகிக்கப்படுகின்றது. குளித்தலை நகராட்சியை பொறுத்தவரை 8412 குடியிருப்புகளுக்கு 25 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. குடிநீர் வினியோகம் தொடர்பாக வரப்பெறும் புகார்கள் வட்டார அளவிலான வாட்ஸ்-அப் செயலி மூலம் கண்காணிக்கப்படுகிறது. மேலும், குடிநீர் வினியோகம் குறித்தோ, குடிநீர் குழாய்கள் பழுது அடைந்திருந்தாலோ மாவட்ட நிர்வாகத்திடம் 1800 425 5104 என்ற கட்டணமில்லா தொலைபேசியிலோ அல்லது 04324-255104 என்ற தொலைபேசி எண்ணிலோ புகார் தெரிவிக்கலாம். அவ்வாறு தெரிவிக்கப்படும் புகார்களின் மீது அன்றைய தினமே உரிய ஆய்வு செய்யப்பட்டு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை கரூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் குடிநீர் தொடர்பாக 104 புகார்கள் பெறப்பட்டு அனைத்து புகார்கள் மீதும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக கரூர் மாவட்டத்தின் தாந்தோன்றி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏமூர் புதூர், குன்னனூர், ஒத்தையூர் பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வரும் பணிகளையும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் சீனிவாசன்(நகர்புறம்), சுதாமகேஷ் (ஊரகம்), நகராட்சி பொறுப்பு ஆணையர்கள் ராஜேந்திரன்(கரூர்), கார்த்திகேயன்(குளித்தலை) உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story