நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்


நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-22T05:17:40+05:30)

நெடுவாசல் மற்றும் கடலோர பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என புதுக்கோட்டையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

புதுக்கோட்டை, 

புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் தேசிய தோட்டக்கலை திட்டத்தின் கீழ் 6 விவசாயிகளுக்கு மானிய விலையில் நகரும் காய் மற்றும் கனி விற்பனை வண்டிகளை கலெக்டர் வழங்கினார்.

தொடர்ந்து புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடு குறித்த வானிலை முன்னெச்சரிக்கைகளை அனைவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள வானிலை முன்னெச்சரிக்கைகளை தெரிவிக்கும் செயலியை TN-S-M-A-R-T-A-PP பதிவிறக்க செயல்முறை வழிகாட்டி துண்டு பிரசுரத்தை விவசாயிகளுக்கு வழங்கினார்.

கூட்டத்தில் விவசாயி தனபதி பேசுகையில், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளில் பல பேருக்கு நிவாரண தொகை கிடைக்கவில்லை. மறுவாழ்வு திட்டங்களும் விவசாயிகளை சென்றடையவில்லை. சேதம் அடைந்த மரங்களுக்கு வனத்துறை பரிந்துரை செய்ததோடு, அந்த பணி 6 மாதங்களாக முடங்கி கிடக்கிறது என்றார்.

இதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசுகையில், கஜா புயல் தொடர்பாக நிவாரண பணிகளை தலையாய கடமையாக பணியாளர்கள் செய்து வருகின்றனர். ஏதேனும் குறைகள் இருந்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படும். மேலும் பட்டா வழங்கல் தொடர்பாக தாலுகா வாரியாக முகாம் நடத்துவது தொடர்பாக அதிகாரிகளை கலந்து பேசி விரைவில் முடிவு அறிவிக்கப்படும்.

விவசாயி சோமையா: காவிரி, வைகை, குண்டாறு திட்டம் தான் புதுக்கோட்டை மாவட்டத்தின் நீர்ஆதாரத்தை பெருக்கும். எனவே இதனை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயி செல்லத்துரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரம் தனியார் மற்றும் அரசு நிலங்களில் எவ்வளவு பரப்பளவில் பயிரிடப்பட்டு உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு வாழ்வாதாரம் பெருக்குவதற்காக நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்க வேண்டும்.

விவசாயி சுப்பிரமணியன்: மணியம்பலம் கண்மாய் தூர்வாரப்படவில்லை. மேலும், அங்கு வைத்திருந்த தடுப்பு கட்டைகளை காணவில்லை. உண்மை நிலவரம் அறிய அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய வேண்டும்.

விவசாயி தினகரசாமி: ஒட்டன்சத்திரத்தில் முருங்கை பவுடர் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதேபோல் புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

ஹைட்ரோ கார்பன் திட்டம்

விவசாயி ராமசாமி: கடந்த ஆண்டு கல்லணை கால்வாயில் தண்ணீர் வரத்து குறைவாக இருந்தது. எனவே இந்த ஆண்டு பொதுப்பணித்துறை கல்லணை கால்வாய் அதிகாரிகளிடம் பேசி நமக்கு வர வேண்டிய தண்ணீரை பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது கல்லணை கால்வாய் பகுதிகளில் ஏரிகள் மற்றும் கால்வாய் தூர்வாரப்பட வேண்டும்.

விவசாயி விசுவநாதன்: மாவட்டத்தில் நீர்நிலைகள் மற்றும் அதன் வரத்து வாய்க்கால்களை தூர்வாராததால் வறட்சியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிமராமத்து பணியை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதியில் முறைகேடு நடக்காமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

விவசாயி பொன்னுசாமி: நெடுவாசல் மற்றும் கடலோர பகுதிகளில் மத்திய அரசின் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

விவசாயி மிசா.மாரிமுத்து: தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்சினையை கவனத்தில் கொண்டு மக்களை பாதுகாக்கும் வகையில் காவிரிகுண்டாறு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மாவட்டத்தில் சுமார் 6 ஆயிரம் குளங்கள், ஏரிகளும் அவற்றுக்கான வாரிகளும் உள்ளன. இவற்றை ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து மீட்டு, தூர்வாரி, நீர்நிலைகளை மேம்படுத்தாமல் நீராதாரத்தை பெருக்க முடியாது.

விவசாயி தங்க.கண்ணன்: கீரமங்கலத்தில் அம்புலி ஆற்றில் விவசாயிகளால் மண்ணால் ஏற்படுத்தப்பட்ட தடுப்பணை மழை காலத்தில் கரைந்து விடுவதால் கான்கிரீட்டால் தடுப்பணை அமைத்து கொடுக்க வேண்டும். விவசாயி துரைமாணிக்கம்: ஆவுடையார்கோவில் தாலுகாவில் பயிர் காப்பீடு செய்தும் இழப்பீடு பெற முடியவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டாலும் நடவடிக்கை எடுப்பதில்லை.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story