சோமரசம்பேட்டை அருகே, விஷம் குடித்து தம்பதி தற்கொலை


சோமரசம்பேட்டை அருகே, விஷம் குடித்து தம்பதி தற்கொலை
x
தினத்தந்தி 22 Jun 2019 4:30 AM IST (Updated: 22 Jun 2019 5:17 AM IST)
t-max-icont-min-icon

சோமரசம்பேட்டை அருகே விஷம் குடித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

சோமரசம்பேட்டை,

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள எட்டரை கடைவீதி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 45). இவரது மனைவி சங்கீதா (40). கணவன்-மனைவி இருவரும் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 15 ஆண்டுகள் ஆகிறது, குழந்தை இல்லை.

நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும், கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் நேற்று காலை நீண்டநேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. மேலும் அவர்கள் தங்கி இருந்த அறையில் இருந்து பூச்சி மருந்து வாடை வந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த கோவிந்தராஜின் தாயார் சரோஜா அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, கோவிந்தராஜீவும், அவரது மனைவி சங்கீதாவும் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரோஜா, மகன் மற்றும் மருமகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதார்.

தகவல் அறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் எதற்காக விஷம் குடித்து இறந்தார்கள் என தெரியவில்லை. பின்னர் போலீசார் இருவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story