முதல்-மந்திரி குமாரசாமியின் கிராம தரிசனம் ‘திடீர்’ ரத்து ஜூலை மாதம் நடைபெறும் என அறிவிப்பு
பலத்த மழை பெய்ததால், கலபுரகி மாவட்டத்தில் நடைபெற இருந்த முதல்-மந்திரியின் 2-வது நாள் கிராம தரிசன நிகழ்ச்சி நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டது.
பெங்களூரு,
முதல்-மந்திரி குமாரசாமி ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு முடிவடைந்து, 2-வது ஆண்டு நடந்து வருகிறது.
கிராம தரிசனம்
இந்த நிலையில் 21-ந் தேதி(நேற்று முன்தினம்) கிராம தரிசன திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி நேற்று முன்தினம் அவர் யாதகிரி மாவட்டம் குருமித்கல் தாலுகாவில் உள்ள சன்டரகி கிராமத்தில் கிராம தரிசனம் செய்தார். அந்த கிராம மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பிறகு நேற்று முன்தினம் இரவு அங்குள்ள அரசு பள்ளியில் தரையில் படுத்து தூங்கினார்.
2-வது நாளான நேற்று கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகாவில் உள்ள ஹெரூர் கிராமத்தில் கிராம தரிசனத்தில் மக்களின் குறைகளை கேட்டறிய திட்டமிட்டு இருந்தார். கலபுரகி மாவட்ட நிர்வாகம் சார்பில் இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் அந்த கிராமத்தில் செய்யப்பட்டிருந்தன. ஆனால் நேற்று முன்தினம் இரவு ஹெரூர் கிராமத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் குமாரசாமி தங்க இருந்த பள்ளியை சுற்றிலும் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் மக்களின் வசதிக்காக போடப்பட்டிருந்த பந்தலும் சாய்ந்து விழுந்தது.
பலத்த மழை
இதையடுத்து கலபுரகி மாவட்ட கலெக்டர், முதல்-மந்திரியை தொடர்பு கொண்டு, கிராம தரிசனம் நடைபெறும் ஹெரூர் கிராமத்தில் பலத்த மழை பெய்து, தண்ணீர் தேங்கி இருப்பதால், இந்த நிகழ்ச்சியை நடத்த இயலாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து ஹெரூர் கிராமத்தில் நேற்று நடைபெற இருந்த கிராம தரிசன நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக முதல்-மந்திரி குமாரசாமி அறிவித்தார். இதுகுறித்து குமாரசாமி யாதகிரியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
“கிராம தரிசன திட்டம் முதல் நாள் (அதாவது நேற்று) யாதகிரி மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது. மக்களின் பல்வேறு குறைகளுக்கு அதே இடத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. இங்கு தீர்க்க முடியாத குறைகள் அடங்கிய மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளேன்.
ஜூலை மாதம் நடைபெறும்
2-வது நாளாக இன்று(அதாவது நேற்று) கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகாவில் உள்ள ஹெரூர் கிராமத்தில் கிராம தரிசனம் நடைபெற அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆனால் அங்கு இரவு பலத்த மழை பெய்து தண்ணீர் தேங்கி நிற்பதாக கலபுரகி மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்தார். இதனால் அங்கு கிராம தரிசனம் நிகழ்ச்சி நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
நடைபெற இருந்த கிராம தரிசன நிகழ்ச்சியை மிகுந்த வருத்தத்துடன் ரத்து செய்துள்ளோம். அதே கிராமத்தில் ஜூலை மாதம் முதல் அல்லது 2-வது வாரம் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும். அதனால் எதிர்பார்ப்பில் இருந்த மக்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம். கண்டிப்பாக இந்த நிகழ்ச்சியை நடத்துவோம். தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதற்காக மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.”
இவ்வாறு குமாரசாமி கூறினார்.
ஐதராபாத்
அதன் பிறகு குமாரசாமி யாதகிரியில் இருந்து சாலை வழியாக ஐதராபாத்திற்கு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் அவர் பெங்களூரு வந்து சேர்ந்தார்.
Related Tags :
Next Story