ரூ.5 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்


ரூ.5 கோடியில் குடிநீர் திட்ட பணிகள் அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி தகவல்
x
தினத்தந்தி 22 Jun 2019 11:00 PM GMT (Updated: 22 Jun 2019 6:30 PM GMT)

அரியலூர் மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ரூ.5 கோடி மதிப்பீட்டில் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்தார்.

அரியலூர்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படும் தலைமை நீரேற்று நிலையம் மற்றும் சின்னவளையம் கிராமத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்படும் இடத்தினை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கொள்ளிடம் ஆற்றில் திருமானூர் பகுதியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து அரியலூர் நகராட்சி பகுதி மக்களுக்கு தினமும் 2.50 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 42 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 12 ஆழ்துளை கிணறுகள் அமைத்தல், ஆழ்துளை கிணறுகளை பராமரித்தல், திருமானூர் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள 4 கிணறுகளை ஆழப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் 1.600 மில்லியன் லிட்டர் மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் (ஆழ்குழாய் கிணறுகள்) மூலம் 1.390 மில்லியன் லிட்டர் குடிநீரை இந்நகராட்சிக்கு சொந்தமான 21 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய ஏதுவாக வறட்சி நிவாரண திட்டத்தின் மூலம் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் பணிகளும், பழைய ஆழ்துளை கிணறுகளை புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமும் மற்றும் உள்ளூர் குடிநீர் ஆதாரங்களான 37 ஆழ்குழாய் கிணறுகளிலிருந்தும் குடிநீர் பெறப்பட்டு வினியோகிக்கப்படுகிறது. மூலதன மானிய நிதியில் 9-வது வார்டு சித்தேரிக்கரைத்தெருவில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. வரதராஜன்பேட்டை பேரூராட்சி பகுதியில் 19 விசைபம்புகள் மூலம் 13 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு நாள் ஒன்றுக்கு 9 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அந்தோணியார்புரத்தில் எதிர்கால குடிநீர் தேவைக்காக ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட உள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களில் 201 கிராம ஊராட்சிகள் மற்றும் 710 குக்கிராமங்கள் உள்ளன. ஊரகப் பகுதிகள் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்திட ரூ.7 கோடியே 47 லட்சம் மதிப்பீட்டில் 608 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், குடிநீர் பிரச்சினைகளைத்தீர்ப்பதற்காக தற்போது ரூ.4 கோடியே 81 லட்சம் மதிப்பீட்டில் 88 பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஊராட்சி ஒன்றிய அளவில் புகார் பெட்டி அமைக்கப்பட்டு குடிநீர் தொடர்பாக வரப்பெறும் புகார்களை உடனுக்குடன் சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு போதுமான அளவு குடிநீர் கிடைத்திட அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது, ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சந்திரசேகரன், பணிமேற்பார்வையாளர் ராமகிருஷ்ணன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Next Story