பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் சம்பவம்: குடிபோதையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தோழியுடன், வாலிபர் சாவு
பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் குடிபோதையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தோழியுடன், வாலிபர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெங்களூரு,
பெங்களூருவில் கேளிக்கை விடுதியில் குடிபோதையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து தோழியுடன், வாலிபர் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நண்பர்கள்
பெங்களூரு ஆர்.எம்.வி. 2-வது ஸ்டேஜில் வசித்து வந்தவர் பவன் (வயது 35). இவர் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். இதேபோல் பெங்களூரு ஆர்.டி.நகரில் வசித்து வந்தவர் வேதா (30). தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்த இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்தார்.
இந்த நிலையில் பவன், வேதா ஆகியோருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் நண்பர்கள் ஆனார்கள். 2 பேரும் அடிக்கடி ஒன்றாக வெளியே சுற்றி வந்தனர். நேற்று முன்தினம் இரவில் பவன்-வேதா ஆகியோர் ஒன்றாக சர்ச் தெருவில் உள்ள கேளிக்கை விடுதிக்கு சென்றனர். பின்னர், அவர்கள் மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் அவர்கள் 2 பேருக்கும் போதை ஏறியது.
2 பேரும் சாவு
அதைத்தொடர்ந்து இரவு சுமார் 11.30 மணியளவில் குடிபோதையில் 2 பேரும் படிக்கட்டு வழியாக கீழே இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக வேதாவின் கால் தடுமாறியது. இதனால், அவர் பவன் மீது விழுந்தார். அப்போது பவனும் நிலைத்தடுமாறவே 2 பேரும் ஜன்னல் வழியாக 3-வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தனர். 2 பேரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த வேளையில் சம்பவ இடத்தின் அருகே இன்னொரு கேளிக்கை விடுதியில் சோதனை நடத்திய பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அலோக் குமார், போலீஸ் அதிகாரிகள் மற்றும் கப்பன்பார்க் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு 2 பேரையும் உடனடியாக மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். அவர்கள் 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக பவுரிங் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழக்குப்பதிவு
இதுபற்றி மாநகர போலீஸ் கமிஷனர் அலோக் குமார் மற்றும் கப்பன்பார்க் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது, கேளிக்கை விடுதியில் உள்ள ஜன்னலில் கதவுகள், கண்ணாடிகள் இல்லாமல் திறந்து கிடந்தது தான் அவர்கள் 2 பேரின் இறப்புக்கும் காரணம் என்பது தெரியவந்தது.
இதையடுத்து கேளிக்கை விடுதி செயல்படும் கட்டிட உரிமையாளர் மற்றும் கேளிக்கை விடுதி மேலாளர் ஆகியோர் மீது கப்பன்பார்க் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். முதற்கட்டமாக போலீசார் கேளிக்கை விடுதி மேலாளரை பிடித்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவு
இதற்கிடையே, பவன்-வேதா ஆகியோர் 3-வது மாடியில் இருந்து கீழே விழும் சம்பவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. இந்த காட்சிகள் தொலைக்காட்சிகளில் வெளியானதோடு, சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது.
Related Tags :
Next Story