ஈரோடு அருகே பரபரப்பு; உயர்மின் கோபுரம் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம்


ஈரோடு அருகே பரபரப்பு; உயர்மின் கோபுரம் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 5:00 AM IST (Updated: 23 Jun 2019 12:42 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அருகே உயர்மின் கோபுரம் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

ஈரோடு,

திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. விவசாய விளை நிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் ஈரோடு அருகே மூலக்கரையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பகுதியில் விவசாயிகள் சிலர் நேற்று மதியம் திரண்டனர். அவர்கள் மாடுகளை அங்கு கொண்டு வந்து கட்டி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது உயர்மின் கோபுரங்கள் அமைப்பதற்கு எதிராக விவசாயிகள் கோஷங்களை எழுப்பினார்கள்.

இந்த போராட்டத்தின்போது விவசாயிகள் சிலர் உயர்மின் கோபுரங்களின் மீது ஏறத் தொடங்கினார்கள். 12 விவசாயிகள் உயர்மின் கோபுரத்தின் மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த ஈரோடு தாலுகா போலீசார் அவர்களை கீழே இறங்கி வருமாறு அறிவுறுத்தினார்கள். அதன்பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கீழே இறங்கி வந்து தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். இதையடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். உயர்மின் கோபுரம் மீது ஏறி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story