அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை


அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை; அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2019 11:15 PM GMT (Updated: 22 Jun 2019 7:12 PM GMT)

அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி நகராட்சி ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிக்கூடம், காசிபாளையம், கரட்டடிபாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ–மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். கல்வி அதிகாரி பாலமுரளி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினியை வழங்கினார். மொத்தம் 1,586 மாணவ–மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டது.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கல்வித்துறையைப் பொறுத்தவரை இந்த கல்வியாண்டில் பிளஸ்–2 படிக்கும் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது பிளஸ்–1 மாணவ, மாணவிகளுக்கும் தமிழகம் முழுவதும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், 2017–18–ம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கும் இலவச மடிக்கணினிகள் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அவர்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுடைய எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு புதிய பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோபியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கோபி நகராட்சியில் ரூ.53 கோடி செலவில் புதிய குடிநீர் திட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அளவில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. அரசின் வேண்டுகோளுக்கிணங்க சமூக சேவை நிறுவனங்கள், முன்னாள் மாணவ சங்கத்தினர் மூலம் ரூ.102 கோடி செலவில் அரசு பள்ளிகளில் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

6–ம் வகுப்பு முதல் 8–ம் வகுப்பு வரை ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும். தமிழகத்தில் இடைநின்ற மாணவர்கள் 1 சதவீதம் மட்டுமே உள்ளது. அவர்களையும் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 1–ம் வகுப்பு முதல் 8– ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வண்ண சீருடைகள் இம்மாத இறுதிக்குள் வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் செயல்பட்டு வரும் பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலமாகவும், உள்ளாட்சி அமைப்பு மூலமாகவும் குடிநீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். தனியார் பள்ளிகளில் குடிநீர் வசதி, போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லையென்றால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அரசு பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆசிரியர் இடமாறுதலுக்கான கலந்தாய்வுக்கு இன்று (நேற்று) முதல் ஆன்லைன் மூலம் ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

அப்போது அவருடன் நம்பியூர் ஒன்றிய செயலாளா தம்பி என்கிற சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கத் தலைவர் காளியப்பன் ஆகியோர் இருந்தனர்.


Next Story