உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது போலீசார் தீவிர விசாரணை


உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 23 Jun 2019 3:45 AM IST (Updated: 23 Jun 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குலசேகரன்பட்டினம், 

உடன்குடி அருகே காட்டுப்பகுதியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் கொலை

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் மெயின் ரோட்டில் காட்டுப்பகுதியில் அமைந்துள்ள ஜோதிநகரில் கடந்த 13-ந் தேதி இரவு பெண் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். மறுநாள் காலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் இதை பார்த்து குலசேகரன்பட்டினம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் ராஜபால் வழக்குப்பதிவு செய்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.

அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலை செய்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் அந்த பெண்ணின் அடையாளம் தெரிந்தது. நெல்லை சுத்தமல்லி ராஜூவ்காந்தி நகரை சேர்ந்த பொன்னுசாமி மனைவி காளியம்மாள் (வயது 60) என்பது தெரியவந்தது. இவர்களுக்கு அய்யப்பன் என்ற ஒரு மகனும், செல்வி, சாந்தி என 2 மகள்களும் உள்ளனர். பொன்னுசாமி 10 வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். அதன்பிறகு காளியம்மாள் ஒவ்வொரு கோவிலாக சென்று வழிபாடு செய்துவிட்டு வாரத்துக்கு ஒரு முறைதான் வீட்டிற்கு வருவது வழக்கமாம். கடந்த 13-ந் தேதி மருத்துவரை பார்த்துவிட்டு வருவதாக காளியம்மாள் வீட்டில் கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அவருடைய மகள் சாந்தி, தனது தாயாரை காணவில்லை என்று சுத்தமல்லி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது தெரியவந்தது. கன்னியம்மாளின் மகன் மற்றும் மகள்கள் தூத்துக்குடி சென்று ஆஸ்பத்திரியில் இருந்த காளியம்மாளின் உடலை பார்த்து இறந்தது தங்களது தாய் தான் என்று உறுதிப்படுத்தினர். மேலும் காளியம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியும் மாயமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

தீவிர விசாரணை

இந்த நிலையில் கொலையாளிகளை பிடிக்க திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாரத் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜபால் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படை போலீசார், நெல்லையை சேர்ந்த காளியம்மாள் எப்படி உடன்குடிக்கு வந்தார்? அவரை குத்திக் கொலை செய்தது யார்? என்று பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story