ஊதியூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 14 செம்மறி ஆடுகள் செத்தன


ஊதியூர் அருகே நாய்கள் கடித்து குதறியதில் 14 செம்மறி ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 23 Jun 2019 3:30 AM IST (Updated: 23 Jun 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

ஊதியூர் அருகே ஆட்டுப்பட்டிக்குள் புகுந்த நாய்கள், அங்கு அடைக்கப்பட்டிருந்த 14 செம்மறி ஆடுகளைக்கடித்துக் கொன்றது. 13ஆடுகள் படுகாயமடைந்தன.

காங்கேயம்,

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் செல்லும் வழியில் ஊதியூரை அடுத்துள்ள சிறுகிணறு அருகே செங்காட்டூரைச்சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 50), விவசாயி. இவர் தனது தோட்டத்தில் 30 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார்.

வழக்கம்போல நேற்று முன்தினம் ஆடுகளை தோட்டத்தில் உள்ள பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலையில் சென்று பார்த்தபோது 14 ஆடுகள் நாய்கள் கடித்து குதறியதில் குடல் சரிந்த நிலையில் செத்துக்கிடந்தன.

செத்த ஆடுகளின் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும். 13 ஆடுகள் பலத்த காயத்துடன் உயிருக்குப்போராடிக் கொண்டிருந்தன. பட்டியின் அடிப்பகுதியில் குழிதோண்டியும், பட்டியைத்தாண்டி உள்ளே சென்றும் நாய்கள் கூட்டம் ஆடுகளை கடித்துக்குதறியதாகக் கூறப்படுகிறது. கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

குள்ளாய்பாளையம், நொச்சிப்பாளையம், சிறுகிணறு, பாப்பினி உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் செம்மறி ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகிறது. அந்தந்தப்பகுதிகளில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் பட்டிகளை தாண்டியும், அடிப்பகுதியில் குழி தோண்டியும் உள்ளே சென்று ஆடுகளை கடித்து குதறி கொன்று வருவது அடிக்கடி நடந்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

தெருநாய்களால் கடித்து குதறப்பட்டு பலியான ஆடுகளுக்கு அரசு உரிய நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்றும், மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆடுகளை குறி வைத்து கடித்து குதறும் தெருநாய்களை பிடித்து ஊருக்கு அப்பால் கொண்டு சென்று விடவேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story