அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளது: மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது அரசு முதன்மை செயலாளர்-கலெக்டர் தகவல்


அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளது: மாவட்டத்தில் ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது அரசு முதன்மை செயலாளர்-கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:15 AM IST (Updated: 23 Jun 2019 1:29 AM IST)
t-max-icont-min-icon

அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது என அரசு முதன்மை செயலாளரும், கலெக்டரும் தெரிவித்தனர்.

நெல்லை, 

அணைகளில் போதிய நீர்இருப்பு உள்ளதால் நெல்லை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது என அரசு முதன்மை செயலாளரும், கலெக்டரும் தெரிவித்தனர்.

ஆலோசனை கூட்டம்

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் குடிநீர் திட்ட பணிகள் மற்றும் குடிநீர் வினியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக அரசின் முதன்மை செயலாளரும், நெல்லை மாவட்ட கண்காணிப்பாளருமான ராஜேந்திர குமார் தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட கலெக்டர் ‌ஷில்பா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு குடிநீர் திட்ட பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடு உள்ள கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்து வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் முதன்மை செயலாளர் ராஜேந்திரகுமார், கலெக்டர் ‌ஷில்பா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடிநீர் பிரச்சினை வராது

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரிய அளவில் குடிநீர் பிரச்சினை இல்லை. தென் மாவட்டங்களில் தென் மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் தேவையான அளவு நீர்இருப்பு உள்ளது. சங்கரன்கோவில், புளியங்குடி மற்றும் சில கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. அந்த கிராமங்களுக்கு லாரி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு ஆகிய அணைகளில் தேவையான தண்ணீர் இருப்பு உள்ளது. நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது பாபநாசம் அணையின் நீர்மட்டம் 40 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 52 அடியாவும் உள்ளது. எனவே, நெல்லை மாவட்டத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் வரை குடிநீர் பிரச்சினை ஏற்படாது. தென்மேற்கு பருவமழை காலம் என்பதால் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அணையின் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்பு உள்ளது.

ரூ.543 கோடியில் புதிய திட்டம்

சங்கரன்கோவில் பகுதியில் கோடைமலையாற்றில் இருந்து அணைக்கட்டு அமைக்கப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது மழை இல்லாததால் அணை வறண்டு விட்டது. அந்த பகுதியில் நிரந்தரமாக குடிநீர் கிடைக்கும் வகையில் ரூ.543 கோடி செலவில் புதிய திட்டம் தயார் செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கோடை காலத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.39 கோடியில் 669 பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் 528 பணிகள் முடிவடைந்துள்ளன. மற்ற பணிகள் விரைவில் முடிக்கப்படும்.

அதேபோல் ரூ.36 கோடி செலவில் அடிபம்பு, ஆழ்துளை கிணறு சரி செய்ய நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் கூடுதலாக ரூ.70 கோடி நிதி ஒதுக்கப்பட உள்ளது. வன்னிக்கோனேந்தல் பகுதியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள மக்கள்தொகையின் அடிப்படையில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது மக்கள் தொகை அதிகரித்து விட்டதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கூட்டு குடிநீர் திட்டம்

சேரன்மாதேவி, மானூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சிற்றாறு கால்வாய்களை தனியார் பங்களிப்பு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. வனப்பகுதிகளில் குடிநீர் கிடைக்காமல் விலங்குகள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதை நாங்கள் ஆய்வு செய்வோம். அப்படியிருந்தால் வனப்பகுதியில் குட்டைகள் அமைத்து குடிநீர் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நெல்லை மாவட்டத்தில் நிலத்தடி நீர் சீராக உள்ளது. அணைகளில் 80 அடிக்கு மேல் தண்ணீர் வரும்போது, விவசாய தேவைகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் 3-வது கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தற்போது நெல்லை மாவட்ட தொழிற்சாலைகளுக்கு தாமிரபரணி தண்ணீர் வழங்கப்படவில்லை.

கூட்டத்தில் நெல்லை மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மாநகராட்சி ஆணையாளர் விஜயலட்சுமி, நகராட்சிகளில் மண்டல இயக்குனர் காளிமுத்து, நெல்லை உதவி கலெக்டர் மணீ‌‌ஷ் நாராணவரோ மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story