நீலகிரி மாவட்டத்தில், நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்க மானியம் - 35 விவசாயிகளுக்கு பணி ஆணை
நீலகிரி மாவட்டத்தில் நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்க மானியத்தில் 35 விவசாயிகளுக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கி பேசினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், தோட்டக்கலை இணை இயக்குனர் சிவசுப்பிரமணியம் மற்றும் விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர். விவசாய சங்கங்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, உரிய துறை அலுவலர்களுக்கு முன்னதாக அனுப்பப்பட்டு தகுந்த விவரம் பெற்று, கூட்டத்தில் 49 கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டு முடிவு காணப்பட்டது.
2019-20-ம் ஆண்டிற்கான தோட்டக்கலைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது. அதன்படி, தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் எலுமிச்சை சாகுபடிக்கு 18 ஹெக்டரும், ஒரு ஹெக்டருக்கு ரூ.13 ஆயிரத்து 195 மானியம், கேரட், உருளைக்கிழங்கு, பீட்ரூட், முட்டைக்கோஸ் சாகுபடிக்கு 218 ஹெக்டரும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ஒரு ஹெக்டருக்கு ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்பட உள்ளது. ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் ரூ.4 கோடியே 27 லட்சத்து 77 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு தெளிப்பு நீர்பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்க நடப்பாண்டில் 2 ஆயிரத்து 50 ஹெக்டர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை உருளைக்கிழங்கு, வாழை, மரவள்ளி போன்ற பயிர்களுக்கு மட்டுமே காப்பீடு இருந்த நிலையில், தற்போது பூண்டு, இஞ்சி, கேரட், முட்டைக்கோஸ் போன்ற பயிர்களுக்கும் காப்பீடு செய்யலாம்.
அதன்படி, விவசாயிகள் பயிர் காப்பீடு பங்கு தொகையாக ஒரு ஏக்கருக்கு உருளைக்கிழங்கிற்கு ரூ.4 ஆயிரத்து 950, வாழைக்கு ரூ.4 ஆயிரத்து 400, மரவள்ளி கிழங்குக்கு ரூ.ஆயிரத்து 695, பூண்டுக்கு ரூ.4 ஆயிரத்து 540, இஞ்சிக்கு ரூ.4 ஆயிரத்து 235, கேரட்டுக்கு ரூ.3 ஆயிரத்து 35, முட்டைக்கோசிற்கு ரூ.3 ஆயிரத்து 580-ஐ கட்டணமாக வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் வேளாண் காப்பீடு நிறுவனத்தில் செலுத்தி பயன்பெறலாம் என்ற விவரம் விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் இயற்கை வேளாண்மை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை வேளாண்மை சங்க உறுப்பினர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டு, ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் திட்டத்தின் கீழ் சிக்கிம் மாநிலம் சென்று இயற்கை வேளாண்மை சாகுபடி தொழில்நுட்பங்களை அறிந்த 35 விவசாயிகளுக்கு நிரந்தர மண்புழு உர கூடாரம் அமைக்க ஒரு ஹெக்டருக்கு ரூ.50 ஆயிரம் மானியம் என மொத்தம் ரூ.17½ லட்சம் மதிப்பிலான பணி ஆணை, கூட்டு பண்ணையத் திட்டம் மூலம் கோத்தகிரி உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 லட்சம் மானியத்தில் உழவு டிராக்டர் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story