கண்டமங்கலம் அருகே, இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது - சிறையில் அடைக்கப்பட்டனர்


கண்டமங்கலம் அருகே, இளம்பெண் பாலியல் பலாத்கார வழக்கில் தேடப்பட்ட 3 பேர் கைது - சிறையில் அடைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 23 Jun 2019 5:15 AM IST (Updated: 23 Jun 2019 2:43 AM IST)
t-max-icont-min-icon

கண்டமங்கலம் அருகே காதலன் கண்முன்பே இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ததாக தேடப்பட்டு வந்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கண்டமங்கலம், 

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் தமிழக - புதுவை மாநில எல்லையில் நல்லூர் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவரும் அதே கம்பெனியில் வேலைபார்த்த சூரமங்கலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரும் காதலித்து வந்தனர்.

சம்பவத்தன்று காதலர்கள் இருவரும் பள்ளி நேலியனூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பள்ளிச்சேரி வயல்வெளியில் ஒரு மரத்தின் அடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது அங்கு வந்த 4 வாலிபர்கள் காதலனை சரமாரியாக தாக்கிவிட்டு, அவர் கண் முன்னே இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பினர். அந்த பெண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் அப்பகுதியை சேர்ந்த மூர்த்தி மகன் அய்யனார் (வயது 25) என்பவரிடம் விசாரணை நடத்தியபோது, அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். அவரை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்ததில் இளம்பெண்ணை நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து போலீசார் அய்யனாரை கைது செய்தனர். அவரது தகவலின் பேரில் இந்த சம்பவம் தொடர்பாக பள்ளிச்சேரியை சேர்ந்த சேது என்ற சேகர்(வயது20), அழகுவேல் என்ற அரிராமன் (21) மற்றும் லிங்காரெட்டிப்பாளையம் அய்யனார் (20)ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் தலைமையிலான போலீசார் குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு கண்டமங்கலம் அரசு பள்ளி அருகே 3 வாலிபர்கள் சந்தேகப்படும் நிலையில் நின்றனர். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற அவர்களை போலீசார் விரட்டி மடக்கிப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாலியல் வழக்கில் தொடர்புடைய சேகர், அழகுவேல், அய்யனார் என்பது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர். 

Next Story