குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2019 3:45 AM IST (Updated: 23 Jun 2019 2:44 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி காலிக்குடங்களுடன் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேனி,

தமிழகத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதன்படி, தேனி மாவட்ட தி.மு.க. சார்பில், தேனி பங்களாமேட்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மனோகரன் வரவேற்று பேசினார். மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கி பேசினார்.

பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர் எல்.மூக்கையா, முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் சிலர் காலிக்குடங்களுடன் கலந்து கொண்டனர்.

காலிக்குடங்களை கையில் வைத்துக் கொண்டு குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தியும், நீர்நிலைகளை தூர்வாராத அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், அவர்கள் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் தேனி நகர பொறுப்பாளர் முருகேசன், ஒன்றிய பொறுப்பாளர் சக்கரவர்த்தி, தி.மு.க. பிரமுகர் தாமரைக்குளம் மகேந்திர வர்மன் மற்றும் நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தொண்டர்கள் சிலர் தேனி நேரு சிலை சிக்னலில் இருந்து பங்களாமேடு வரை காலிக்குடங்களுடன் கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். 

Next Story