ஒரு மாதத்துக்குள் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம்
‘ஒரு மாதத்துக்குள் குடிநீர் பிரச்சினையை தீர்க்காவிட்டால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்‘ என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி கூறினார்.
கன்னிவாடி,
தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்கக்கோரி தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் அமைச்சரும், தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் சிவகுருசாமி, மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொத்தப்புளி ஊராட்சி செயலாளர் ரெங்கசாமி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் கொத்தப்புளி, அழகுபட்டி, சில்வார்பட்டி, நீலமலைக்கோட்டை, முருநெல்லிக்கோட்டை உள்ளிட்ட 24 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து ஏராளமானோர் காலிக்குடங்களுடன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை சம்பந்தமாக கலெக்டர் டி.ஜி.வினய் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும், ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் நடத்திய கூட்டத்திலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை அழைக்கவில்லை.
குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சேர்ந்து கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளித்தோம். ஆனால் அவர் அதற்கு முறையான பதில் அளிக்கவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்குள் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்காவிட்டால் கிராம மக்களை ஒன்று திரட்டி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்.
மேலும் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.200 கூலி தரவேண்டும். ஆனால் ரூ.100 முதல் ரூ.80 வரை கூலி தருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்ட ஊராட்சி அதிகாரிகள் தலையிட்டு தொழிலாளர்கள் பிரச்சினையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவேன்.
தமிழகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயலிழந்து விட்டது. குடிநீர் பிரச்சினையை போக்க எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில தி.மு.க. வர்த்தகர் அணி இணை செயலாளர் ஜெயன் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், நகர, ஒன்றிய கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
நத்தம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. சார்பில், தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தி நத்தம் பேரூராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஆண்டி அம்பலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரத்தினகுமார், வெள்ளைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆழ்துளை கிணறுகள் அமைத்தும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலமும் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர செயலாளர் முத்துக்குமாரசாமி, பொதுக்குழு உறுப்பினர் ராஜ்மோகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பதுருஸ்மான், ஒன்றிய துணை செயலாளர் குப்புசாமி மற்றும் நத்தம், சாணார்பட்டி ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் மகளிர் அணியினர் காலிக்குடங்களுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் வேடசந்தூரில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி தலைமை தாங்கினார்.
வேடசந்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன், வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், நகர செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், சீனிவாசன், எரியோடு நகர செயலாளர் உமாச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.
நிலக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தட்டுப்பாடின்றி குடிநீர் வினியோகம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அன்பழகன் முன்னிலை வகித்தார். நிலக்கோட்டை ஒன்றிய செயலாளர் மாயாண்டி வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன், நிலக்கோட்டை நகர செயலாளர் கருணாநிதி, அம்மையநாயக்கனூர் நகர செயலாளர் செல்வராஜ் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி பழனி பஸ்நிலைய ரவுண்டானா பகுதியில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. சின்னச்சாமி, முன்னாள் ஒன்றிய செயலாளர் மாரியப்பன், முன்னாள் நகர்மன்ற தலைவர்கள் வேலுமணி, உமாமகேஷ்வரி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. பேசும்போது, குடிநீர் தட்டுப்பாட்டை போக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தண்ணீருக்காக மக்கள் குடங்களை தூக்கி கொண்டு வீதியில் நிற்கிறார்கள். ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், கோடைகால நீர்த்தேக்கத்தை விரிவாக்கம் செய்யும் பணியை தமிழக அரசு கிடப்பில் போட்டுள்ளது என்றார். காலிக்குடங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். ஆத்தூர் ஒன்றிய செயலாளர் (கிழக்கு) முருகேசன், ஒன்றிய செயலாளர் (மேற்கு) ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், சின்னாளபட்டி முன்னாள் நகர செயலாளர் அறிவழகன் உள்பட தி.மு.க.வினர் ஏராளமானோர் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே, நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. நகர செயலாளர் ராஜப்பா தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் காந்திராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினை குறித்தும், அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்காத தமிழக அரசை கண்டித்தும் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கலந்துகொண்டு குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story