பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க கோரி 70 கிராம மக்கள் மதுரைக்கு நடைபயணம்


பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க கோரி 70 கிராம மக்கள் மதுரைக்கு நடைபயணம்
x
தினத்தந்தி 23 Jun 2019 4:45 AM IST (Updated: 23 Jun 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க கோரி கொட்டாம்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட 70 கிராம மக்கள் மதுரை நோக்கி நடைபயணம் தொடங்கியுள்ளனர்.

கொட்டாம்பட்டி,

மதுரை மாவட்டத்்தில் எல்லை பகுதியில் அமைந்துள்ளது, கொட்டாம்பட்டி. கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றிய பகுதியில் கொட்டாம்பட்டி, சேக்கிப்பட்டி உள்பட 16 ஊராட்சிகளை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வானம் பார்த்த பூமியாக உள்ளன. பருவமழை பொய்த்து போனதால் அப்பகுதியில் விவசாயம் முற்றிலும் முடங்கியது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் தென்னை மரங்கள் கருகின. இதனால் விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். இதனால் கொட்டாம்பட்டி ஒன்றிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களுக்கு முல்லைப்பெரியாறு பாசன கால்வாயை நீட்டிப்பு செய்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. மேலும் மாவட்டத்தின் எல்லையில் இருப்பதனால் என்னவோ கொட்டாம்பட்டி ஒன்றிய பகுதியை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர், அப்பகுதி மக்கள்.

இந்தநிலையில் அப்பகுதியை சேர்ந்த கிராம பெரியவர்கள் ஆலோசனையின்பேரில் இளைஞர்கள் சமூக வலைதளம் வழியாக ஒன்றிணைந்து பொதுமக்களின் ஆதரவு திரட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு சேக்கிபட்டியில் பொதுக்கூட்டம் நடத்தினர். அப்போது பெரியாறு பாசன கால்வாயை நீட்டிப்பு செய்யக்கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர். அதன்படி நேற்று மாவட்டத்தின் எல்லை பகுதியில் அமைந்துள்ள சூரப்பட்டியில் ஒவ்வொரு கிராமமாக 500-க்கும் மேற்பட்டோர் முதற்கட்டமாக மதுரை நோக்கி நடைபயணம் தொடங்கினர். ஒவ்வொரு கிராமமாக சென்று இளைஞர்கள் ஆதரவு திரட்டி, நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையே அவர்கள் நாகமங்கலம் நான்கு வழிச்சாலையில் வந்தபோது, மேலூர் எம்.எல்.ஏ. பெரியபுள்ளான் நடைபயணம் சென்றவர்களை சந்தித்து பேசினார். அப்போது கொட்டாம்பட்டி பகுதியில் முல்லைப்பெரியாறு கால்வாயை நீட்டிப்பு செய்ய ஏற்பாடு செய்ய வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வலியுறுத்தப்படும் என தெரிவித்தார்.

தொடர்ச்சியாக 70 கிராமங்களுக்கு சென்றும், பொதுமக்களை ஆதரவு திரட்டியும் நடைபயணமாக நாளை(திங்கட்கிழமை) மதுரை கலெக்டர் அலுவலகம் சென்று பெரியாறு பாசன கால்வாயை நீட்டிக்க வேண்டி மனு அளிக்கவுள்ளனர்.

Next Story