இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ‘சென்சார்’ கருவி; தண்ணீர் வினியோகம் சீரானது


இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை மாநகராட்சி குடிநீர் லாரிகளில் ‘சென்சார்’ கருவி; தண்ணீர் வினியோகம் சீரானது
x
தினத்தந்தி 23 Jun 2019 4:30 AM IST (Updated: 23 Jun 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே முதல் முறையாக மதுரை மாநகராட்சி குடிநீர் லாரிகளில் சென்சார் கருவி பொருத்தப்பட்டுள்ளன. அதனால் லாரி வாடகைக்காக மாநகராட்சி செலவு செய்யும் தொகை பாதியாக குறைந்துள்ளது.

மதுரை,

மதுரை நகர மக்களுக்கு வைகை அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தினமும் 180 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. அது தவிர கோச்சடை, மணலூர் வைகை ஆற்று படுகைகளில் அமைக்கப்பட்ட கிணறுகள் மற்றும் இதர ஆழ்குழாய் கிணறுகள் மூலம் 30 மில்லியன் லிட்டர் நீர் பெறப்பட்டு மதுரை மக்களுக்கு வழங்கப்படுகிறது.

மதுரை மாநகரின் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் வினியோகம் குழாய் மூலம் செய்யப்படுகிறது. இருப்பினும் இதில் பிரச்சினை ஏற்படும் போது லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. அதற்காக தனியார் நிறுவனத்தின் லாரிகள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன.

இந்த லாரிகள் மூலம் நடக்கும் குடிநீர் வினியோகத்தை மேம்படுத்த வாகனங்கள் மேலாண்மை என்ற திட்டம் கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.ஆனால் இந்த திட்டம் முழு அளவில் அமலுக்கு வரவில்லை.

இந்த நிலையில் மதுரை மாநகராட்சி கமி‌‌ஷனராக பொறுப்பேற்ற விசாகன், இந்த திட்டத்தை உடனடியாக செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுத்தார். அதன்படி உறங்கி கிடந்த இந்த திட்டம் தட்டி எழுப்பப்பட்டது. இந்த திட்டப்பணிகளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ஒரு நிறுவனம் மேற்கொண்டுள்ளது. வாகன பிரிவு உதவி பொறியாளர் அமர்தீப், அந்த நிறுவன என்ஜினீயர் கார்த்திக் ஆகியோர் பணியை கண்காணித்து வருகின்றனர்.

தற்போது மாநகராட்சியில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 34 டேங்கர் லாரிகளும், 6 ஆயிரம் கொள்ளளவு கொண்ட டிராக்டர்களும் குடிநீர் வினியோகத்திற்கு பயன்படுத்தப்படுகின்றன. அதன் மூலம் தினமும் 5.46 மில்லியன் லிட்டர் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது இந்த குடிநீர் வாகனங்கள் அனைத்திலும் சென்சார் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.

இதனால் ஏராளமான பலன்கள் மாநகராட்சிக்கு கிடைத்துள்ளன. ஒரு லாரி எந்த இடத்தில் நிற்கிறது. ஒரு பகுதிக்கு தண்ணீர் வினியோகித்துவிட்டு மீண்டும் எவ்வளவு நேரத்தில் திரும்புகிறது, எந்த இடத்தில் எவ்வளவு தண்ணீர் வினியோகம் செய்கிறது என அனைத்தும் பதிவாகிறது. அதே போல் குடிநீர் லாரிகளை யாரும் தங்கள் இ‌‌ஷ்டத்திற்கு பயன்படுத்த முடியாது. ஒரு வார்டில் எந்த பகுதிக்கு குடிநீர் லாரிகள் தேவை என்பதனை சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும். வேறு யாரும் விண்ணப்பிக்க முடியாது.

இந்த விண்ணப்பத்தை ஏற்று கொண்டு, அந்த பகுதிக்கு என்று ஒதுக்கப்பட்ட லாரிக்கு, கம்ப்யூட்டர் தானாகவே பணியை ஒதுக்கும். பின்னர் அந்த லாரி தண்ணீருடன், அந்த பகுதிக்கு சென்று குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். மாறாக வேறு பகுதிகளுக்கு சென்றால், ஜி.பி.எஸ். கருவி காட்டி கொடுத்து விடும். எனவே உடனடியாக அந்த லாரி தானாகவே தடை செய்யப்பட்டு விடும். அடுத்த முறை தண்ணீர் வழங்கும் பணி பெற முடியாது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே தண்ணீர் வினியோகம் செய்ததற்கும் கட்டணம் வழங்கப்பட மாட்டாது.

அதே போல் ஒரு லாரி பொதுமக்களுக்கு சென்று குடிநீர் வழங்காமல் தனிநபருக்கு சென்று ஒரு தொட்டியில் தண்ணீர் ஊற்றினாலும், அதனை சென்சார் கருவி காட்டி கொடுத்து விடும். அதாவது லாரியில் இருந்து வெளியேறும் தண்ணீரின் வேகம் பதிவு செய்யப்படுவதை வைத்து சிக்னல் கொடுத்து விடும். அந்த லாரியும் உடனடியாக தடை செய்யப்படும்.

இது போன்ற பல்வேறு நடவடிக்கையால் குடிநீர் மிச்சப்படுத்தப்படுகிறது. மேலும் மாநகராட்சி லாரிகளுக்கு செலவு செய்த தொகை பாதியாக குறைந்து உள்ளது.

அதாவது கடந்த 2017-ம் ஆண்டு ஒரு மாதத்திற்கு குடிநீர் லாரிகளுக்கு மாநகராட்சி வாடகையாக ரூ.1 கோடியே 49 லட்சம் செலவு செய்துள்ளது. ஆனால் இந்த திட்டம் முழு அளவில் நடைமுறைப்படுத்திய கடந்த மாதம் (மே) வெறும் ரூ.63 லட்சம் மட்டுமே வாடகையாக செலுத்தி உள்ளது. இது மாநகராட்சி சிக்கன நடவடிக்கையின் மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அதே போல் சீரான வினியோகத்தால் அதிகளவு தண்ணீர் மிச்சப்படுத்தப்படுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக செயல்படுத்தப்படும் இந்த திட்டம் மதுரையில் வெற்றிகரமாக நடந்து வருகிறது.

Next Story