சைக்கிளில் சென்ற போது பரிதாபம்: பள்ளி வாகனம் மோதி மாணவன் பலி


சைக்கிளில் சென்ற போது பரிதாபம்: பள்ளி வாகனம் மோதி மாணவன் பலி
x
தினத்தந்தி 23 Jun 2019 3:15 AM IST (Updated: 23 Jun 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

மதுரையில் பள்ளி வாகனம் மோதி சைக்கிளில் சென்ற 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்துபோனான். மற்றொரு மாணவன் படுகாயமடைந்தான்.

மதுரை,

மதுரை திருமோகூர் அருகே உள்ள பெருங்குடி கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்கருப்பு. இவருடைய மகன் ஆகாஷ்(வயது 13), மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். அதே ஊரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் செல்லப்பாண்டி(11), திருமோகூரில் உள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு பயின்று வந்தான்.

நேற்று விடுமுறை என்பதால் ஆகாசும், செல்லப்பாண்டியும் அப்பகுதியில் சைக்கிள் ஓட்டி பழகினர். ஆகாஷ் சைக்கிளை ஓட்ட, செல்லப்பாண்டி பின்னால் அமர்ந்து சென்றுள்ளான். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி வாகனம் ஒன்று எதிர்பாராத விதமாக மாணவர்கள் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் சைக்கிளில் இருந்து மாணவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். படுகாயமடைந்த செல்லப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துபோனான். ஆகாஷ் படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தான்.

இந்த விபத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று படுகாயத்துடன் உயிருக்கு போராடிய மாணவன் ஆகாசை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீசார் வழக்குப்பதிந்து தனியார் பள்ளி வாகன டிரைவர், மதுரை பைபாஸ் ரோட்டை சேர்ந்த ராஜராஜசோழன்(30) என்பவரை கைது செய்தனர்.

Next Story