ஏற்காடு அடிவாரத்தில், சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியல் - போக்குவரத்து பாதிப்பு
ஏற்காடு அடிவாரத்தில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கன்னங்குறிச்சி,
சேலம் ஏற்காடு அடிவாரம் மெயின் ரோட்டில் இருந்து கொண்டப்பநாயக்கன்பட்டி முயல்நகர் வரையிலான சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தநிலையில் திடீரென அந்த பணி நிறுத்தப்பட்டு கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியுற்று வந்தனர்.
இதற்கிடையில், முயல்நகர் அருகே உள்ள மாருதிநகரில் சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முயல்நகர் சாலையை சீரமைக்க கோரி கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது அவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அங்கிருந்து கலைந்து சென்ற பொதுமக்கள் ஏற்காடு அடிவாரம் பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரைந்து வந்த கன்னங்குறிச்சி போலீசார் மற்றும் உதவி செயற்பொறியாளர் பிரபு குமார் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முயல்நகர் சாலையை விரைவில் சீரமைப்பதாக பொதுமக்களிடம் உறுதியளித்தனர். இதையடுத்து அங்கிருந்து சென்ற பொதுமக்கள் முயல்நகர் பகுதியில் மீண்டும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அங்கு அவர்களிடம், இன்னும் 25 நாட்களில் சாலை அமைத்து தருகிறோம் என்று அதிகாரிகள் கூறினர். அதன்பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story