காகிதப்பட்டறையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


காகிதப்பட்டறையில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 22 Jun 2019 10:27 PM GMT (Updated: 22 Jun 2019 10:27 PM GMT)

வேலூர் காகிதப்பட்டறையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர், 

வேலூர் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நீர்நிலைகள் அனைத்தும் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்து விட்டதால் ஆழ்துளை கிணற்றை நம்பிய மக்களும் ஏமாற்றத்தில் உள்ளனர். காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஓரளவுக்கு கைக்கொடுக்கிறது. எனினும் குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கி விட்டனர்.

இந்த நிலையில் குடிநீர் சரிவர கிடைக்காததால் வேலூர் காகிதப்பட்டறை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நேற்று மாலை 4.30 மணி அளவில் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் அவர்கள் மறியலை கைவிடவில்லை. அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் கண்ணன் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தை ¾மணி நேரம் நீடித்தது. தண்ணீர் தட்டுப்பாடு உள்ள தெருக்களுக்கு லாரிகள் மூலம் தண்ணீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் எங்கள் பகுதிக்கு குடிநீர் வாரத்துக்கு ஒருமுைற வினியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று (நேற்று முன்தினம்) குறைவான நேரமே தண்ணீர் வினியோகிக்கப்பட்டது. இதனால் செல்லியம்மன்கோவில் தெரு, தலையாரிமாணியம்தெரு, மேலாண்டை தெரு ஆகிய தெருக்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்படவில்ைல. இன்று (நேற்று) வினியோகிக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இன்றும் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து விட்டதாக கூறுகின்றனர். எங்கள் பகுதிக்கு வந்து சேர வேண்டிய குடிநீர், தோட்டபாளையத்துக்கு திருப்பிவிட்டுள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகள் கூறுகையில், காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் இப்பகுதிக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே இக்குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அவை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. சரிசெய்த பின்னால் தட்டுப்பாடு இல்லாமல் குடிநீர் வினியோகிக்கப்படும் என்றனர்.

Next Story