போர்வெல் லாரி உரிமையாளரை போலீசார் அழைத்துச் சென்றதால் பொதுமக்கள் சாலை மறியல்
போர்வெல் லாரி உரிமையாளரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றதால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கம்,
செங்கத்தை அடுத்த பரமனந்தல் கிராமத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையைப் போக்குவதற்காக ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஆணையாளர்கள் ஆழ்துளை கிணறு அமைத்து கிராம மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள ஆற்றுப் புறம்போக்கு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
இதற்காக ஏலம் விடப்பட்டு நேற்று ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. அப்போது தேர்வு செய்யப்பட்ட இடம் புறம்போக்கு இடம் அல்ல தனக்கு சொந்தமான இடம் என பரமனந்தல் கொல்லகொட்டாய் கிராமத்தை சேர்ந்த ராமநாதன் (வயது 53) என்பவர் போர்வெல் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போர்வெல் அமைக்கும் பணி நிறுத்தப்பட்டு செங்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை செய்தபோது ராமநாதன் தனக்கு சொந்தமான இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க கூடாது என கூறியதை தொடர்ந்து போர்வெல் லாரி உரிமையாளர் ஒடஞ்சமடை கிராமத்தை சேர்ந்த சங்கர் என்பவரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பரமனந்தல் பொதுமக்கள் ஆற்றுப் புறம்போக்கு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும் எனவும், போர்வெல் லாரி உரிமையாளர் சங்கரை உடனே போலீசார் விடுவிக்க வேண்டும் எனவும் கூறி குப்பநத்தம்- செங்கம் சாலையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்திய பின் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் ஆற்றுப் புறம்போக்கு இடம் என வருவாய்த்துறை சான்று உள்ளது எனவும், அதனால் உடனடியாக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து பரமனந்தல் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் எனவும் போலீசாருக்கும், ஊரக வளர்ச்சித் துறைக்கும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story