குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் - எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி தி.மு.க. ஆர்ப்பாட்டம் - எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
x
தினத்தந்தி 23 Jun 2019 4:15 AM IST (Updated: 23 Jun 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி எ.வ.வேலு எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை,

குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணா சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு கழக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான எ.வ.வேலு தலைமை தாங்கினார். கழக தணிக்கைக்குழு உறுப்பினரும், எம்.எல்.ஏ.வுமான கு.பிச்சாண்டி, மாவட்ட அவைத் தலைவர் த.வேணுகோபால், சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட துணை செயலாளர் சாவல்பூண்டி மா.சுந்தரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்காத அ.தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் குடிநீருக்காக ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என பல்வேறு போராட்டங்கள் தினமும் நடைபெற்று வருகிறது.

கருணாநிதி ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் அன்றே நம்முடைய நகருக்கு ரூ.36 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் வழங்கவில்லை என்றால் திருவண்ணாமலையிலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கும்.

மாவட்டத்தின் தலைநகரில் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்றாலும் கூட நமது மாவட்டத்தில் உள்ள 860 ஊராட்சிகளிலும், 18 ஒன்றியங்களிலும் குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது. காரணம் கடந்த 5 மாதங்களாக தமிழக அரசு எந்தவித முன்ஏற்பாடுகளும், போர்கால நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல் - அமைச்சர் தமிழ்நாட்டில் குடிநீர் பற்றாக்குறை இல்லை என்றும் தி.மு.க. குடிநீர் பற்றாக்குறை இருப்பது போல் மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள் என்று கூறுகிறார்.

மேலும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியும் தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினை இல்லை என்று கூறுகிறார். தமிழகத்தில் அணைகள், ஏரிகள், குளங்கள் வறண்டு உள்ளன. வருங்காலத்தில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சியில் அமரும் போது தான் தமிழகத்தில் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் பெண்கள் காலி குடங்களுடன் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, கே.வி.சேகரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாவட்ட அமைப்பாளர்கள் கே.வி.மனோகரன், டாக்டர் எ.வ.வே.கம்பன், பொன்.முத்து, ஜீவானந்தம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story