கோவையின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, கோவை விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைந்து முடிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
கோவையின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலைய விரிவாக்க பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
கோவை,
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் தொழில் வணிகத்தை எளிமையாக்குவதில் முன்னோக்கிய பயணம் என்ற தலைப்பில் கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா அரங்கில் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் தலைவர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். கொடிசியா தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். மாநில தொழில் துறையின் முதன்மை செயலர் முருகானந்தம், மாவட்ட கலெக்டர் ராஜாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொழில்துறை அமைச்சர் சம்பத் ஆகியோர் கருத்தரங்கை தொடங்கி வைத்தனர். இதில் தொழில்துறை அமைச்சர் சம்பத் பேசியதாவது:-
தமிழகத்தில் தொழில்துறையின் வளர்ச்சியில் கோவை மாவட்டம் 2-ம் இடத்தில் உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில்துறையின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தி வருகிறார். இதற்காக தமிழ்நாடு வர்த்தக எளிதாக்கல் சட்டம் 2018 கொண்டு வரப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் பெரிய தொழில் நிறுவனங்களுக்கும், தொழில் துறையினருக்கும் தேவையான அனைத்து சலுகைகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. தொழில்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ வேண்டும் என்று தமிழக அரசு முழுமையாக செயல்பட்டு வருகிறது.
கோவையில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த சிப்காட் மூலம் சூலூரில் 500 ஏக்கரில் தொழிற்சாலை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். தொழில்வளர்ச்சியில் ஒற்றைச்சாளர (சிங்கிள் விண்டோவ்) முறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை 430 சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கும், 41 பெரிய தொழில் நிறுவனங்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:- தமிழகத்தில் நடைபெற்ற 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் சிறு,குறு, நடுத்தர தொழில்களுக்கு ரூ.32,206 கோடி முதலீடு பெறப்பட்டு உள்ளது. தொழில்ரீதியாக பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகள் செய்வதற்கும் இந்த மாநாடு வழிவகுத்து உள்ளது. தமிழ்நாடு வானூர்தி மற்றும் பாதுகாப்பு தொழில் கொள்கை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த கொள்கையின் கீழ் விமானம் மற்றும் ராணுவ தளவாடங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மாநிலத்தில் அமைப்பவர்களுக்கு உரிய ஊக்கத்தினை அரசு அளிக்கும்.
தமிழகம் 3 பெரிய துறைமுகங்கள், 15 சிறு துறைமுகங்கள், 7 விமான நிலையங்களுடன் சிறந்த உள்கட்டமைப்பை கொண்டு உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உள்கட்டமைப்பு முதலீட்டை 4 முதல் 5 சதவீதத்தில் இருந்து 11.5 சதவீதமாக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.11,776 கோடி மதிப்பீட்டில் 326 திட்டங்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அம்ருத் திட்டத்தின் கீழ் 445 பணிகள் ரூ.11,441 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவையின் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு விமான நிலையத்தை விரிவாக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்படும். இதற்காக முதற்கட்டமாக நில உரிமையாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. விரிவாக்க பணிகள் முடிவடைந்தால் சரக்கு விமானங்கள் அதிகளவு கோவை வர முடியும். இதுதவிர மெட்ரோ ரெயில் திட்டமும் செயல்படுத்தப்படும்.
கோவை லட்சுமி மில் முதல் விமானநிலையம் வரை ரூ.900 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும். ரூ.320 கோடி செலவில் மேற்கு புறவழிச்சாலை, ரூ.215 கோடியில் உக்கடம்-ஆத்துப்பாலம் மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சியில் கோவைக்கான வளர்ச்சி பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்தரங்கில் கோவை தொழில்துறையினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story