கடலில் மீன்பிடித்தபோது மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிலை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு


கடலில் மீன்பிடித்தபோது மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிலை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 23 Jun 2019 5:11 AM IST (Updated: 23 Jun 2019 5:11 AM IST)
t-max-icont-min-icon

கானத்தூர் கரிகாட்டுக்குப்பம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தபோது வலையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை சிக்கியது. இந்த சிலை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்போரூர்,

சென்னை புறநகர் பகுதியான கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் அருகே கரிகாட்டுக்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த மீனவர் சிவலிங்கம் என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 3 பேருடன் மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர். வடநெம்மேலி முதலை பண்ணை அருகே கடலுக்குள் மீன்பிடிக்க வலைவிரித்தனர். அப்போது மீனுடன் ஒரு சிலை சிக்கியது.

உடனே மீனவர்கள் அந்த சிலையை கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, கிருஷ்ணர் சிலை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிலையை தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சிலையை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர், அதனை கிராம நிர்வாக அலுவலர் உதவியுடன் திருப்போரூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தார். பின்னர் மாவட்ட கலெக் டருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, தாலுகா அலுவலக பதிவறையில் சிலை பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

வலையில் சிக்கிய ஒரு அடி உயர கிருஷ்ணர் சிலை, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐம்பொன் சிலை என்று கூறப்படுகிறது. இதன் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். சிலையின் வலது புறம் தீயினால் சுட்ட அடையாளம் உள்ளது. இந்த சிலை தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று வருவாய்த்துறையினர் தெரிவித்தனர்.

வலையில் சிக்கிய சிலையை நேர்மையாக ஒப்படைத்த மீனவர்களை போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பாராட்டினர்.

Next Story