ஆலங்குடியில் திடீரென தோன்றிய மழை மாரியம்மன் சிலைக்கு பக்தர்கள் பூஜை


ஆலங்குடியில் திடீரென தோன்றிய மழை மாரியம்மன் சிலைக்கு பக்தர்கள் பூஜை
x
தினத்தந்தி 23 Jun 2019 10:45 PM GMT (Updated: 23 Jun 2019 5:29 PM GMT)

ஆலங்குடியில் திடீரென தோன்றிய மழை மாரியம்மன் சிலைக்கு பக்தர்கள் பூஜை செய்து வழிபட்டனர்.

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் ‘கஜா‘ புயலால் 2 மணி நேரம் மழை பெய்தது. அதற்கு பிறகு மழை பெய்யவில்லை. தற்போது கடும் வறட்சி நிலவுவதால் நீர்நிலைகள் வறண்டு விட்டன. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மழை பெய்ய வேண்டி தற்போது கோவில்களில் யாகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆலங்குடி ஆதிபராசக்தி கோவில் அருகே சுமார் 3½ அடி உயரமுள்ள மழை மாரியம்மன் சிலை திடீரென தோன்றியதாக அப்பகுதி மக்கள் கூறினர். பின்னர், அந்த அம்மன் சிலைக்கு மஞ்சள், குங்குமம் வைத்தும், மாலை அணிவித்தும், சூடம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது. நேற்று காலையும் சாரை, சாரையாக கிராம மக்கள் வந்து அந்த அம்மன் சிலைக்கு சூடம் ஏற்றி வணங்கினர்.

பறிமுதல்

இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குடி தாசில்தார் கருப்பையா, வருவாய் ஆய்வாளர் சாந்தி, பேருராட்சி துப்புரவு பணிகள் மேலாளர் ராஜேந்திரன் ஆகியோர் அந்த சிலையை பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைத்தனர். அந்த சிலை திடீரென தோன்றியது தானா?, அல்லது யாராவது நள்ளிரவில் கொண்டு வந்து வைத்தார்களா? என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story