கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை எதிர்த்து போராட்டம் ஜான்பாண்டியன் பேட்டி


கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை எதிர்த்து போராட்டம் ஜான்பாண்டியன் பேட்டி
x
தினத்தந்தி 24 Jun 2019 3:30 AM IST (Updated: 23 Jun 2019 11:56 PM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.

நெல்லை, 

கூடங்குளம் அணுக்கழிவு மையத்தை எதிர்த்து போராட்டம் நடத்தப்படும் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன் கூறினார்.

மாநில செயற்குழு கூட்டம்

தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில செயற்குழு கூட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தென்மண்டல அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிறுவன தலைவர்ஜான்பாண்டியன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் பிரிசில்லா பாண்டியன், துணை பொதுச்செயலாளர்கள் நெல்லையப்பன், இமான்சேகர், நல்லுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செய்தி தொடர்பாளர் சண்முக சுதாகர் வரவேற்று பேசினார்.

அப்போதுநிறுவனதலைவர் ஜான்பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள நரேந்திர மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வருகிற நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவது குறித்து விவாதிக்கப்பட்டது.

பல்வேறு உட்பிரிவுகளில் அழைக்கப்படும் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களை தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்க வேண்டும். அவர்களை பட்டியல் இனத்தில் இருந்து வெளியேற்றி வேளாண் மரபினர் என்ற பொதுப்பெயரில் அழைக்க வேண்டும். மக்கள் தொகையின் அடிப்படையில் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

கூடங்குளம் விவகாரம்

குடிநீர் பிரச்சினையில் தி.மு.க. நாடகம் ஆடுகிறது. ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். ஆனால் குடிநீர் பிரச்சினையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதை தி.மு.க.வினர் விளக்க வேண்டும்.

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அங்கு அமைக்கப்படும் அணுக்கழிவு மையத்தில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் ஒட்டு மொத்தமாக தமிழக மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் ஆபத்தான அணுக்கழிவு மையம் அமைக்கும் திட்டத்தை கைவிடக் கோரி அரசியல் கட்சி இல்லாத அமைப்புகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்தப்படும். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

எங்கள் கட்சியின் கட்டமைப்பு மாற்றப்படுகிறது. மாநகர் மாவட்டம் என்ற பொறுப்பு இனி கட்சி கட்டமைப்பில் இருந்து நீக்கப்படும். மாவட்ட அளவில் 2 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கப்படுகிறது. அதேபோல் 4 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மண்டல செயலாளர் பொறுப்பு வழங்கப்படும். அதேபோல் கட்சி துணை அமைப்புகள் அனைத்தும் மறுகட்டமைப்பு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாநில பொருளாளர் அய்யாத்துரை பாண்டியன், வக்கீல் பிரிவு செயலாளர் சிவராஜேந்திரன், மாநில தொண்டர் அணி செயலாளர் முத்துராஜ், விவசாய அணி மாநில செயலாளர் துரை தவமணி, மண்டல செயலாளர்கள் பட்டாபிராமன், அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story