பெரம்பலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை 120 பேர் எழுதினர்


பெரம்பலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வை 120 பேர் எழுதினர்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 12:02 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வினை 120 பேர் எழுதினர். இதில் சர்வர் கோளாறு காரணமாக மதியம் முடிவடைய வேண்டிய தேர்வு மாலையில் தான் முடிவடைந்தது.

பெரம்பலூர்,

அரசு பள்ளிகளில் பணிபுரிவதற்கு கணினி ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக, கணினி ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வான கணினி வழியிலான ஆன்-லைன் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் கணினி ஆசிரியர்களுக்கான கணினி வழியிலான தேர்வு பெரம்பலூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 4 தேர்வு மையங்களில் நேற்று நடந்தது.

இதனை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அருளரங்கன் தலைமையிலான அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தேர்வினை எழுதுவதற்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து 128 கணினி ஆசிரியர்கள் தகுதி பெற்றிருந்தனர். இந்த தேர்வினை எழுத 120 பேர் வந்திருந்தனர். 8 பேர் வரவில்லை. நேற்று காலை 10 மணிக்கு தொடங்கிய கணினி வழியிலான தேர்வு மதியம் 1 மணிக்கு முடிவடைந்திருக்க வேண்டும்.

ஆனால் காலை 11.30 மணியளவில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் சர்வரில் திடீரென்று கோளாறு ஏற்பட்டதால் தேர்வர்கள் கணினியில் தொடர்ந்து தேர்வு எழுதுவதற்கு தடை ஏற்பட்டது. இதையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்கள் சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் முடியவில்லை.

இதனால் தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு தாமதமாகி கொண்டிருந்தது. சர்வர் திடீர் சரியாவதும், கோளாறு ஏற் படுவதும் தொடர்ந்தது. இதனால் மதியம் 1 மணிக்கு தேர்வு முடியவில்லை. மதியத்திற்கு பிறகு சர்வரில் ஏற்பட்ட கோளாறு சரியானது. இதையடுத்து சர்வர் கோளாறினால் ஏற்பட்ட தாமதத்தினை தேர்வர்கள் கூடுதலாக தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

சர்வர் கோளாறினால் கணினி ஆசிரியர்களுக்கான கணினி வழியிலான போட்டி தேர்வு மாலையில் தான் முடிவடைந்தது. காலை 10 மணிக்கு தேர்வு மையங்களுக்கு நுழைந்த தேர்வர்கள் சர்வரில் ஏற்பட்ட கோளாறினால் மதியம் வரை தேர்வு முடியாததால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். இதனால் அவர்கள் மதியம் உணவு சாப்பிட செல்ல முடியவில்லை. அவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், கல்லூரி நிர்வாகம் சார்பில் டீ, பிஸ்கட் வழங்கப்பட்டது. 

Next Story