நெல்லை அருகே துணிகரம்: 4 வீடுகளில் புகுந்து பெண்களிடம் நகை பறிப்பு மர்மநபர்களுக்கு வலைவீச்சு
நெல்லை அருகே ஒரே நாளில் 4 வீடுகளில் புகுந்து பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நெல்லை,
நெல்லை அருகே ஒரே நாளில் 4 வீடுகளில் புகுந்து பெண்களிடம் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் சங்கிலி பறிப்பு
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள பருத்திப்பாடு ஊரைச் சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முற்றத்தில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டின் உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கம்மாள் கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று விட்டார்.
பின்னர் நேற்று காலை எழுந்த அங்கம்மாள் தனது கழுத்தில் சங்கிலி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். யாரோ மர்மநபர் புகுந்து சங்கிலியை திருடிச் சென்றுவிட்டது தெரியவந்தது.
மூன்றடைப்பு
இதேபோல் ஆழ்வாநேரியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 40). விவசாயி. நேற்று முன்தினம் இரவு ஜெயக்குமார், காற்றுக்காக ஜன்னலை திறந்து வைத்து, தனது மனைவி கிறிஸ்டி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஜன்னல் வழியாக கதவை திறந்து வீட்டின் உள்ளே நுழைந்து கிறிஸ்டி கழுத்தில் கிடந்த 2½ பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.
இதில் திடுக்கிட்டு எழுந்த கிறிஸ்டி, திருடன் திருடன் என்று கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் 2½ பவுன் சங்கிலியுடன் இருளில் ஓடி மறைந்து விட்டார். இச்சம்பவங்கள் குறித்த புகார்களின் பேரில் மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.
மூன்றடைப்பு அருகே உள்ள புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கணபதி. அவருடைய மனைவி ராமலட்சுமி (40). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி கொண்டு இருந்தார். நள்ளிரவு வந்த மர்ம நபர் ராமலட்சுமி அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதுகுறித்து மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லையை அடுத்து முன்னீர்பள்ளம் அருகே உள்ள தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் இசக்கியப்பன். அவருடைய மனைவி இசக்கியம்மாள் (35). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது, பின்பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்த மர்ம நபர், இசக்கியம்மாள் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார்.
இதுபற்றி முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாள் இரவில் 4 பெண்களிடம் இருந்து மொத்தம் 14½ பவுன் தங்க சங்கிலி பறிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவங்கள் தொடர்பாக போலீசார் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story