சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது: பெங்களூருவில், தென்மேற்கு பருவமழை தொடங்கியது மக்கள் மகிழ்ச்சி


சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது: பெங்களூருவில், தென்மேற்கு பருவமழை தொடங்கியது மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 23 Jun 2019 10:30 PM GMT (Updated: 23 Jun 2019 9:05 PM GMT)

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. நேற்று பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பெங்களூரு, 

பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. நேற்று பெய்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

பருவமழை தொடங்கவில்லை

தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஒரு வாரத்திற்கும் மேல் தாமதமாக தொடங்கியது. அதன் பிறகு கர்நாடகத்திற்கு பருவமழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி மற்றும் மலை பிரதேசங்களான குடகு, சிக்கமகளூரு ஆகிய பகுதிகளில் மட்டுமே மழை பெய்து வந்தது.

ஆனால் மற்ற பகுதிகளில் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு பருவமழை தொடங்கவில்லை. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பெங்களூருவில் மழை பெய்யவே இல்லை. மே மாதத்தில் கோடை மழை பெய்தது. கோடை மழை முடிந்த பிறகு நகரவாசிகள் பருவமழையை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

மேகமூட்டம் காணப்பட்டது

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து, வானத்தில் மேகமூட்டம் காணப்பட்டது. கருமேகங்கள் ஒன்று சேர்ந்தன. இதனால் மழை பெய்யும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மழை பெய்யவே இல்லை. சிறிது மழை துளிகளை மட்டுமே பார்க்க முடிந்தது. கருமேகங்கள் ஒன்று கூடியபோதும் மழை பெய்யவில்லையே என்று மக்கள் வருத்தம் அடைந்தனர். வருண பகவான் ஏன் இப்படி நம்மை சோதிக்கிறார் என்று மக்கள் பேசிக்கொண்டனர்.

இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. வெயில் தென்படவில்லை. கருமேகங்கள் சூழ்ந்தபடி இருண்ட நிலையிலேயே இருந்தது. இன்று (நேற்று) நிச்சயம் மழை வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் பகல் 3 மணியளவில் கருமேகங்கள் சூழ்ந்து, இருண்ட நிலை ஏற்பட்டது.

குளம் போல் காணப்பட்டது

அதன் பிறகு திடீரென மழை பெய்யத்தொடங்கியது. விதான சவுதா, ராஜாஜிநகர், பன்னரகட்டா ரோடு, பிளேக்ஹள்ளி, பேகூர், வில்சன் கார்டன், சிட்டி மார்க்கெட், கப்பன் பூங்கா உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. பெங்களூருவுக்கு தென்மேற்கு பருவமழை காலத்தின் முதல் மழை இது தான். பெரிய அளவுக்கு மழை இல்லை என்றாலும், ஓரளவுக்கு சுமார் 30 நிமிடங்கள் வரை லேசான மழை பெய்தது. மழை நின்றுவிட்ட பிறகும் லேசான தூறல் தூறிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. வெள்ளம் தேங்கியதால் சில இடங்கள் குளம் போல் காணப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தது. இதனால் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு வாகன நெரிசல் ஏற்படவில்லை. இந்த மழையை கண்டு பெங்களூரு நகரவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பருவமழை தொடங்கியுள்ளதால், அடுத்து வரும் நாட்களில் நல்ல மழை பெய்யும் என்று மக்கள் பேசிக்கொண்டனர். மழை பெய்ததால் நகரில் குளிர்ந்த காற்று வீசியது.

Next Story