எருமாடு பகுதியில் ஆதிவாசி கிராமங்களில் கலெக்டர் ஆய்வு; குடிநீர் கிணறுகளை சீரமைக்க உத்தரவு


எருமாடு பகுதியில் ஆதிவாசி கிராமங்களில் கலெக்டர் ஆய்வு; குடிநீர் கிணறுகளை சீரமைக்க உத்தரவு
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

எருமாடு பகுதியில் ஆதிவாசி கிராமங்களில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குடிநீர் கிணறுகளை சீரமைக்க அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகா எருமாடு அருகே சோமரா ஆதிவாசி காலனி உள்ளது. இங்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா, மாவட்ட குடிநீர் கண்காணிப்பாளர் நீராஜ்மத்தேல் ஆகியோர் நேற்று திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது ஆதிவாசி மக்களுக்கு குடிநீர் வசதி முறையாக உள்ளதா? என்று விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடிநீர் கிணறை பார்வையிட்டனர். அப்போது கிணறு மிகவும் சுகாதாரமற்று இருந்தது. இதைத்தொடர்ந்து கிணற்றை சீரமைக்க கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர். பின்னர் ஆதிவாசி மக்களின் வீடுகள் பராமரிப்பின்றி இருப்பதை கண்டனர். இது சம்பந்தமாக அலுவலர்களிடம் மாவட்ட அதிகாரிகள் விளக்கம் கேட்டனர்.

அப்போது ஆதிவாசி கிராமத்துக்கு நடைபாதை, சாலை வசதி இல்லாததால் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் புதிய வீடுகள் கட்டுவதில் சிரமம் உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர். இதனிடையே புதிய வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

தொடர்ந்து புதிய வீடுகள், சாலை அமைக்க அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். பின்னர் எருமாடு அருகே கப்பாலா, கையுன்னி மங்கரை, பி.ஆர்.எப். ஆதிவாசி கிராமங்களில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். குடிநீருக்கு பயன்படுத்தப்படும் கிணறுகளை பார்வையிட்டனர். அப்போது அனைத்து கிணறுகளும் பராமரிப்பின்றி சுகாதாரமற்ற நிலையில் இருப்பதை அதிகாரிகள் கண்டனர்.

இதைத்தொடர்ந்து குடிநீர் கிணறுகளை பராமரிக்கவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி ஒன்றியம் உள்பட உள்ளாட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.

ஆய்வின் போது திட்ட இயக்குனர் (ஊராட்சி) பாபு, கூடலூர் ஆர்.டி.ஓ. ராஜ்குமார், மாவட்ட செயற்பொறியாளர் சந்திரசேகர், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் கிருஷ்ணபிரகாஷ், ஜோதி லிங்கம், மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் ஸ்ரீஜா, நந்தகுமார் உள்பட பல துறைகளை சேர்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story