‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு

‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு: சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சாவு
x
தினத்தந்தி 23 Jun 2019 10:30 PM GMT (Updated: 23 Jun 2019 9:31 PM GMT)

‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

பெங்களூரு, 

‘டிக்-டாக்‘ செயலிக்காக கர்நாடகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. சாகசத்தில் ஈடுபட்டு முதுகெலும்பு முறிந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் நேற்று பரிதாபமாக இறந்தார்.

வாலிபரின் முதுகெலும்பு முறிந்தது

துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா கோடேகெரே கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 26). இவர், ‘டிக்-டாக்‘ செயலி பயன்படுத்தி வந்தார். அதில் அவர் நடனம் ஆடியும், பாடல்கள் பாடியும் வீடியோக்கள் பதிவேற்றம் செய்தும் வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் சாகசம் செய்வது போன்ற வீடியோவை ‘டிக்-டாக்‘ செயலியில் பதிவிட முடிவு செய்தார். இதற்காக அவர் சிறிது தொலைவில் இருந்து ஓடிவந்து தனது நண்பரின் உதவியுடன் தரையில் கை, கால்கள் படாமல் தலைகீழாக பின்நோக்கி பல்டி அடிக்க முயன்றார்.

அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்த குமாரின் முதுகெலும்பு முறிந்தது.

சிகிச்சை பலனின்றி சாவு

இதையடுத்து உடனடியாக அவர் மீட்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி குமார் நேற்று பரிதாபமாக இறந்தார்.

‘டிக்-டாக்‘ வீடியோவுக்காக கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள முதல் உயிரிழப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story