அரசு பஸ்களில் பயணிகளிடம் ரூ.10 நாணயங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்; கண்டக்டர்களுக்கு அதிகாரி உத்தரவிட்டதாக வாட்ஸ்அப்பில் பரவியதால் அதிர்ச்சி


அரசு பஸ்களில் பயணிகளிடம் ரூ.10 நாணயங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்; கண்டக்டர்களுக்கு அதிகாரி உத்தரவிட்டதாக வாட்ஸ்அப்பில் பரவியதால் அதிர்ச்சி
x
தினத்தந்தி 24 Jun 2019 4:15 AM IST (Updated: 24 Jun 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

அரசு பஸ்களில் பயணிகளிடம் ரூ.10 நாணயங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்று கண்டக்டர்களுக்கு அதிகாரி ஒருவர் உத்தரவிட்டதாக வாட்ஸ்அப்பில் தகவல் பரவியது.

ஈரோடு,

ரூ.10 நாணயங்கள் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வெளிவந்தபோது, அந்த நாணயங்கள் செல்லாது என்று வதந்தி பரவியது. இதனால் கடைகள், வணிக நிறுவனங்கள், பஸ்களில் ரூ.10 நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் ரூ.10 நாணயங்கள் வாங்கப்படுவதில்லை என்று தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. எனவே ரூ.10 நாணயங்கள் வாங்க மறுக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் அரசு பஸ்களில் பயணிகளிடம் இருந்து ரூ.10 நாணயங்கள் வாங்கக்கூடாது என்று போக்குவரத்துக்கழக அதிகாரிகள் உத்தரவிட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை கோட்டம் ஈரோடு மண்டலத்துக்கு உள்பட்ட திருப்பூர் கிளை மேலாளர் உத்தரவிட்டு இருப்பதாக அந்த ஆணை வாட்ஸ்அப்பில் பரவியது. அரசு ஆணையைபோல இல்லாமல் ஒரு காகிதத்தில் “நடத்துனர்களின் கவனத்துக்கு” என்று தலைப்பிட்டு ரூ.10 நாணயங்கள் வாங்கக்கூடாது என்று எழுதப்பட்டு இருந்தது.

அதில், பஸ்சில் பயணிகளிடம் இருந்து ரூ.10 நாணயங்கள் வாங்குவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டுமென்றும், தவறும்பட்சத்தில் வழித்தடத்தில் பயணிகளுக்கு கொடுத்துவிட வேண்டுமென்றும், வசூல் தொகையை செலுத்தும்போது ரூ.10 நாணயங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த உத்தரவில் கிளை மேலாளரின் சீல் மற்றும் கையெழுத்து இடம் பெற்றிருந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது, “ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயத்தை பயணிகளிடம் இருந்து வாங்கக்கூடாது என்று அரசு அதிகாரி உத்தரவிட்டு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரூ.10 நாணயங்கள் செல்லும் என்றும், வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் ரிசர்வ் வங்கி பலமுறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் அரசு அதிகாரியே இதுபோன்று உத்தரவிட்டு இருப்பது பொதுமக்களை குழப்பமடைய செய்துள்ளது. எனவே ரூ.10 நாணயங்களை வழக்கம்போல் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.

Next Story