கொடுமுடி அருகே ரெயில்வே கேட்டில் ஈரோடு- நெல்லை பயணிகள் ரெயில் என்ஜின் திடீர் பழுது; 2 மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு


கொடுமுடி அருகே ரெயில்வே கேட்டில் ஈரோடு- நெல்லை பயணிகள் ரெயில் என்ஜின் திடீர் பழுது; 2 மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 24 Jun 2019 3:30 AM IST (Updated: 24 Jun 2019 3:27 AM IST)
t-max-icont-min-icon

கொடுமுடி அருகே ரெயில்வே கேட்டில் ஈரோடு-நெல்லை பயணிகள் ரெயில் என்ஜின் பழுதானதால் ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் 2 மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஊஞ்சலூர்,

ஈரோடு-நெல்லை பயணிகள் ரெயில் ஈரோட்டில் இருந்து நேற்று மதியம் புறப்பட்டு நெல்லைக்கு சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் 1.30 மணி அளவில் கொடுமுடியை அடுத்த வெங்கம்பூர் ரெயில்வே கேட் அருகே சென்றபோது திடீரென என்ஜின் பழுதானது. இதனால் ரெயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.

ரெயில் நின்ற ரெயில்வே கேட் திருச்சி-ஈரோடு மெயின் ரோட்டில் உள்ளது. இந்த ரோடு வழியாக கரூர், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து ஈரோட்டுக்கும் இங்கிருந்து தென்மாவட்டங்களுக்கும் தினமும் பஸ், கார், லாரி, வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் சென்றபடி இருக்கும்.

இந்தநிலையில் ரெயில் என்ஜினில் ஏற்பட்ட பழுதால், ரெயில்வே கேட் மூடப்பட்டது. இதனால் கரூர், திருச்சி, மதுரை போன்ற ஊர்களில் இருந்து வந்த வாகனங்களும், ஈரோட்டில் இருந்து சென்ற வாகனங்களும் மேற்ெகாண்டு செல்ல முடியாமல் வரிசையில் நின்றன. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கொடுமுடி, மலையம்பாளையம் போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை மாற்றி விட்டனர். அதன்படி ஊஞ்சலூர் வழியாக செல்லவேண்டிய வாகனங்கள் தாமரைப்பாளையம், நடுப்பாளையம், கருமாண்டம்பாளையம் வழியாக ஈரோடு சென்றன.

அதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மதுரை, திருச்சி போன்ற ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் கருமாண்டம்பாளையம், நடுப்பாளையம், தாமரைப்பாளையம், கொடுமுடி வழியாக சென்றன.

இதற்கிடையே வேறு என்ஜின் கொண்டு வரப்பட்டு ரெயிலில் பொருத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மதியம் 3.30 மணி அளவில் ரெயில் அங்கிருந்து புறப்பட்டு் சென்றது. பின்னர் ரெயில்வே கேட் திறக்கப்பட்டதால் வாகனங்கள் வழக்கம்போல் அந்த ரோட்டில் சென்றது.

ரெயில் என்ஜின் பழுதாகி ரெயில்வே கேட் மூடப்பட்டதால் சுமார் 2 மணி நேரம் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story