உச்சிப்புளி அருகே நீர் நிலைகளில் குவிந்த பறவைகள்


உச்சிப்புளி அருகே நீர் நிலைகளில் குவிந்த பறவைகள்
x
தினத்தந்தி 24 Jun 2019 4:15 AM IST (Updated: 24 Jun 2019 3:50 AM IST)
t-max-icont-min-icon

உச்சிப்புளி அருகே நீர் நிலைகளில் பறவைகள் குவிந்துள்ளன. இங்கு மர்ம நபர்கள் பறவைகளை வேட்டையாடுவதை தடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பனைக்குளம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை போதிய அளவு பெய்யாததால் மாவட்டத்தில் பல கண்மாய்கள் மற்றும் ஊருணி,நீர் நிலைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு காட்சியளித்து வருகின்றன. மாவட்டத்தில் உள்ள மேலச்செல்வனூர்,தேர்த்தங்கால்,சித்திரங்குடி உள்ளிட்ட பறவைகள் சரணாலயங்களிலும் தண்ணீர் இல்லாததால் பறவைகள் அனைத்தும் நீர் நிலைகளை தேடி அலைந்து வருகின்றன.

இந்த நிலையில் உச்சிப்புளி அருகே உள்ள மானாங்குடி-புதுமடம் இடையே உள்ள நீர்நிலையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் அங்கு ஆயிரக்கணக்கான நாமக்கட்டி கோழிகள் உள்ளிட்ட பறவைகள் குவிந்துள்ளன.இதை தவிர நீர்க்காகம்,கொக்கு,உள்ளான் பறவைகள்,வெள்ளை அரிவாள் மூக்கன்,கருப்பு அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பல வகையான பறவைகளும் இரை தேடுவதற்காக இங்கு குவிந்துள்ளன. நீர் நிலைகளில் குவிந்துள்ள நாமக்கட்டி கோழிகள் நீண்ட தூரம் பறந்து செல்வதையும், தண்ணீரில் நீந்திய படியும்,மூழ்கிய படியும் இரை தேடுவதையும் அந்த வழியாக செல்லும் புதுமடம்,மானாங்குடி கிராம மக்கள் ஆச்சர்யத்துடனும் மகிழ்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.

இந்நிலையில் மானாங்குடி-புதுமடம் இடையே நீர் நிலைகளில் கூட்டமாக நிற்கும் பறவைகளை மர்ம நபர்கள் வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது.அதற்கு அடையாளமாக நீர் நிலையை ஒட்டியள்ள புல்வெளிகளில் பறவைகளின் இறகுகள் சிதறி கிடக்கின்றன.எனவே உச்சிப்புளி அருகே மானாங்குடி,புதுமடம் பகுதிகளில் நீர் நிலைகளில் குவிந்துள்ள பறவைகளை வேட்டையாடும் மர்ம நபர்களை பிடிக்க சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story