மதுரை அருகே போராட்டத்தால் 3 மணி நேரம் தாமதமாக கணினி ஆசிரியர் தேர்வு தொடங்கியது


மதுரை அருகே போராட்டத்தால் 3 மணி நேரம் தாமதமாக கணினி ஆசிரியர் தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 24 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 4:19 AM IST)
t-max-icont-min-icon

மதுரை அருகே தேர்வு எழுத வந்திருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு 3 மணி நேரம் தாமதமாக தொடங்கியது.

மதுரை,

மதுரை அருகே திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பொட்டப்பாளையத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில் முதுகலை கணினி ஆசிரியர் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதைத்தொடர்ந்து தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு, முன்னதாக நுழைவு சீட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணிக்கு முடியும் என்றும், எனவே தேர்வு எழுதுபவர்கள் அனைவரும் காலை 8.30 மணிக்கு கல்லூரி வளாகத்திற்குள் வரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி இந்த கல்லூரியில் நேற்று தேர்வு நடந்தது.

இதற்காக வெளி மாவட்டங்கள் உள்பட தேர்வு எழுத வந்த 650 பேர் கல்லூரிக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சேர்ந்தனர். இந்தநிலையில் தேர்வை எழுத கல்லூரி நிர்வாகம் 400 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கி, அவர்களுக்கான தேர்வு எழுதும் வசதியை செய்திருந்தனர். மீதமுள்ளவர்களுக்கு வேறு இடம் ஒதுக்கி தருவதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து முதலில் வந்த 400 பேர் தேர்வு எழுத சென்றனர்.

இதைதொடர்ந்து மீதமுள்ள 250 பேரும் நேரம் அதிகமான காரணத்தால், தங்களை ேதர்வு எழுத அனுமதிக்கும்படி தேர்வு அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையில் முதலில் சென்ற 400 பேரும், தேர்வு எழுத செல்லாதவர்களுக்கு ஆதரவாக வெளியில் வந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதில் தேர்வு எழுத வந்த 650 பேரையும் ஒரே நேரத்தில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் அல்லது தேர்வு எழுதும் தேதியை மாற்றக்கோரி கோஷமிட்டு தரையில் அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து வந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மங்களேஸ்வரன், கோட்டாட்சியர் செல்வகுமாரி, துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தொழில் கல்வித் துறை இணை இயக்குனர் சுகன்யா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து, திருப்புவனம் தாசில்தார் ராஜா, போலீஸ் இன்ஸ்பெக்டர் சேது உள்பட அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 650 பேரையும் தேர்வு எழுதுவதற்கு ஏற்பாடு செய்தனர். அதைத்தொடர்ந்து மதியம் 1 மணிக்கு அனைவரும் தேர்வு எழுத சென்றனர். இந்த போராட்டத்தால் சுமார் 3 மணி நேரம் தாமதமாக தேர்வு நடைபெற்றது.

Next Story