பிரபல வங்கியில் கிளார்க், அதிகாரி வேலை : 545 காலியிடங்கள்


பிரபல வங்கியில் கிளார்க், அதிகாரி வேலை : 545 காலியிடங்கள்
x

சவுத் இந்தியன் வங்கியில் கிளார்க் மற்றும் அதிகாரி பணியிடங்களுக்கு 545 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரம் வருமாறு:-

பிரபல தனியார் வங்கிகளில் ஒன்று சவுத் இந்தியன் வங்கி. தற்போது இந்த வங்கியில் புரபெசனரி கிளார்க் மற்றும் புரபெசனரி ஆபீசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் புரபெசனரி கிளார்க் பணியிடங்களுக்கு 385 பேரும், புரபெசனரி அதிகாரி பணிக்கு 160 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

கிளார்க் பணியிடங்கள்

கிளார்க் பணிகளுக்கு மொத்தம் 385 இடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரியை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்திற்கு மட்டும் 310 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

வயது வரம்பு

கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 30-6-2019-ந் தேதியில் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் 10,12 மற்றும் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுக்கு குறையாமல் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டணம்

பொதுப் பிரிவினர் ரூ.600-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.150-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்த வேண்டும். இறுதியில் தேவையான சான்றுகளை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 30-ந் தேதியாகும்.

அதிகாரி பணிகள்

புரபெசனரி அதிகாரி பணிக்கு 160 இடங்கள் உள்ளன. இந்த பணிக்கு 1-7-1994 மற்றும் 30-6-2000 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர் ரூ.800-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.200-ம் கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 30-6-2019-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும்.

ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் தனிநபர் நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதற்கான ஆன்லைன் தேர்வு 25-7-2019-ந் தேதி நடக்கிறது.

இவை பற்றிய விரிவான விவரங்களை www.southindianbank.com. என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.


Next Story