மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை தூர்வார விவசாயிகளுக்கு கலெக்டர் அனுமதி


மாமல்லபுரம் சோழிபொய்கை குளத்தை தூர்வார விவசாயிகளுக்கு கலெக்டர் அனுமதி
x
தினத்தந்தி 24 Jun 2019 9:45 PM GMT (Updated: 2019-06-24T23:13:09+05:30)

மாமல்லபுரம் சோழி பொய்கைகுளத்தை தூர்வார விவசாயிகளுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்து உள்ளார்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், வடக்கு மாமல்லபுரம் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி 60 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களுக்கு அங்குள்ள சோழிபொய்கைகுளம் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு இந்த குளத்து பாசனம் மூலம் விவசாயிகள் நெற்பயிர், காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வந்தனர்.

நாளடைவில் இந்த குளம் தூர்ந்து கோரை புற்கள், செடிகள் வளர்ந்து நீர் ஆதாரம் இன்றி வறண்டு விட்டது. இந்த குளத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்திலேயே முதன்முதலாக கூட்டுறவு பாசன முறையில் பம்பு செட் அமைத்து, இலவச மின் மோட்டார் மூலம் விளைநிலங்களுக்கு தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 6 ஏக்கர் பரப்பளவு உள்ள இந்த குளத்தை தூர்வார விவசாயிகள், பொதுமக்களை ஒருங்கிணைத்து தொடங்கப்பட்ட மல்லை நீர்நிலைகள் பாதுகாப்பு சங்கத்தினர் இந்த குளத்தை தூர்வார தங்களுக்கு பொதுப்பணித்துறை மூலம் அனுமதி தர வேண்டும் என்று காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து இக்குளத்தை பொதுமக்களே தூர்வார அனுமதி வழங்கி கலெக்டர் பொன்னையா ஆணை பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து மல்லை நீர்நிலை பாதுகாப்பு சங்கத் தலைவர் என்.ஜனார்த்தனம் தலைமையில் சங்க அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் விவசாயிகள், பொதுமக்கள் சார்பில் இக்குளத்தை தூர்வார அனுமதி வழங்கிய காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டருக்கு நன்றி தொரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story