காவிரி ஆற்றில் மீன் பிடிக்க வீசிய தோட்டா வெடித்து வாலிபர் கை துண்டானது


காவிரி ஆற்றில் மீன் பிடிக்க வீசிய தோட்டா வெடித்து வாலிபர் கை துண்டானது
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 24 Jun 2019 11:25 PM IST)
t-max-icont-min-icon

அம்மாபேட்டை அருகே காவிரி ஆற்றில் மீன் பிடிக்க வீசிய தோட்டா வெடித்து வாலிபர் கை துண்டானது.

அம்மாபேட்டை,

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள புஞ்சாம்பாளையம் கந்தன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சோலையப்பன். இவருடைய மகன் மணிகண்டன் (வயது 23). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது நண்பர்கள் 4 பேருடன் ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே நெரிஞ்சிப்பேட்டை காவிரி ஆற்றின் அக்கரையில் உள்ள பூலாம்பட்டி நாவிதன் கொட்டாய் பகுதிக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் 5 பேரும் ஆற்றில் குளித்தனர். இதைத்தொடர்ந்து மணிகண்டன் உள்பட 5 பேரும் ஆற்றில் தோட்டாவை வீசி மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது மணிகண்டன், தோட்டாவை ஆற்றில் வீச முயன்றபோது அது வெடித்தது. இதனால் மணிகண்டனின் வலது கை முறிந்து துண்டானது. இதன்காரணமாக வலிதாங்க முடியாமல் அவர் கதறினார். இதை பார்த்த நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் பவானி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மணிகண்டன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘காவிரி ஆற்றில் தினமும் ஒருசிலர் தோட்டாவை வீசி அதை வெடிக்க செய்து மீன்களை பிடித்துச்செல்கிறார்கள். தற்போது வாலிபர் ஒருவர் மீன் பிடித்தபோது தோட்டா வெடித்து, அவரின் கை துண்டாகி உள்ளது. இதனால் விபரீதத்தை உணராமல் ஆற்றில் தோட்டாவை வீசி மீன் பிடிப்பவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.


Next Story