நவீனமயமாக்கப்பட்ட மன்னார்குடி- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் ரெயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்


நவீனமயமாக்கப்பட்ட மன்னார்குடி- ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கம் ரெயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்
x
தினத்தந்தி 25 Jun 2019 4:30 AM IST (Updated: 25 Jun 2019 12:11 AM IST)
t-max-icont-min-icon

நவீனமயமாக்கப்பட்ட மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இயக்கப்பட்டது. இதை ரெயில்வே அதிகாரிகள் தொடங்கி வைத்தனர்.

மன்னார்குடி,

2018-2019-ம் நிதி ஆண்டில் 146 எக்ஸ்பிரஸ் ரெயில்களில் உள்ள பெட்டிகளை முற்றிலும் நவீனமயமாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி 7 ரெயில்கள் இதுவரை நவீனப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது. 8-வது ரெயிலாக மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நவீனமயமாக்கப்பட்டு உள்ளது.

இந்த ரெயில் மன்னார்குடியில் இருந்து வாரந்தோறும் திங்கட்கிழமை மதியம் 12.25 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை மாலை 5.50 மணிக்கு ஜோத்பூர் அருகே உள்ள ‘பகத் கி கோதி’ பகுதிக்கு சென்றடையும். மொத்தம் 18 பெட்டிகளை கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரெயலில் ‘பயோ’ கழிவறை, ஜி.பி.எஸ். வசதி உள்ளிட்ட நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக பெட்டிகளின் உள்புறமாகவும், வெளிப்புறமாகவும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது. நவீனமயமாக்கப்பட்ட மன்னார்குடி-ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மன்னார்குடியில் இருந்து தனது முதல் பயணத்தை தொடங்கியது.

அதன் இயக்கத்தை தொடங்கி வைக்கும் விழா மன்னார்குடி ரெயில் நிலையத்தில் நடந்தது. விழாவில் மன்னார்குடி ரெயில் நிலைய கண்காணிப்பாளர் மனோகரன் தலைமை தாங்கினார்.

தெற்கு ரெயில்வே பராமரிப்பு மேலாளர் அனில்குமார் சிசோடியா, தஞ்சை கோட்ட மெக்கானிக்கல் அதிகாரி மணிவண்ணன், தண்டவாள பராமரிப்பு மேலாளர் சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டு நவீனமயமாக்கப்பட்ட ரெயிலின் இயக்கத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். விழாவையொட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் மாவிலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஒரு பெட்டியை நவீனப்படுத்த ரூ.60 லட்சம் வரை செலவிடப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story